உலகின் பொது மொழி, உலக மக்கள் அனைவரும் பேசும் ஒரே மொழி என்று எதுவும் இல்லை. சினிமாவைத் தவிர.
அதுமட்டும்தான் எல்லாரோடும் பேசும். எல்லோராலும் புரிந்து கொள்ளப்படும். காரணம் சினிமா காதோடு பேசும் மொழியல்ல. மனசோடு பேசும் மொழி.
சினிமா மூலம் பேசுகிறவர்களுக்கென்று தனி மொழி இருக்கிறது. அது சிலருக்கு புரியலாம், சிலர் கொண்டாடலாம். சிலருக்கு அது புரியாமலும் போகலாம்.
ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் படம் பார்த்த உடனே புரிந்தவர்கள் குறைவு. பார்த்து பார்த்து மனம் நிறைந்தவர்கள் நிறைய… ‘ஏழு கடல் ஏழு மலை’ அப்படியான படம்.
ராமின் கதைகள் பேரன்பை பேசுபவை . அதைத்தான் இந்த படமும் பேசுகிறது. சின்னக் குழந்தைகளுக்கு ‘ஏழு கடல் ஏழு மலை தாண்டி…’ என்று பாட்டிகள் கதை சொல்லத் தொடங்குவது போல இதில் அதே பாணியில் பெரியவர்களுக்கான ஒரு கதை சொல்கிறார் ராம்.
நிச்சயமாக இது ‘அம்புலி மாமா’ கதைதான். ஆனால் அது பேசுவது உலகின் பேரன்பை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற பேரன்பை.
8 ஆயிரம் ஆண்டுகளாகத் தன் காதலி அஞ்சலியை தேடும், காதலன் நிவின் பாலியின் கதைதான் இது. அப்படி இந்த நிகழ்காலத்தில் காலத்தில் தேடும்போது அவனது ரெயில் பயணத்தில் சிக்குகிறான் தன் குடும்பத்தைப் பிரிந்து எட்டு ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பும் சூரி. அந்த ரெயில் பயணத்தில் அவர்களின் உரையாடல், மோதல் உலகின் உயிர் அரசியலை பேசுகிறது.
நீண்ட முடி, அடர்த்தியான தாடி, எந்த நேரத்தில் எதைச் செய்வார் என்ற பதற்றத்தைக் கொடுக்கும் உடல்மொழி போன்றவற்றால் அக்கதாபாத்திரம் கோரும் மர்மத்தைக் கொண்டுவந்திருக்கிறார் நிவின் பாலி. ஆங்காங்கே வரும் அன்பு, காதல், ஆக்ரோஷம், நையாண்டி போன்றவற்றாலும் வலுசேர்க்கிறார் நிவின்.
அப்பாவித்தனம், ஆற்றாமை, சேட்டை, அழுகை, ஆங்காங்கே மிகை நடிப்பு எனத் தனக்குப் பழக்கப்பட்ட சட்டையை மீண்டும் உடுத்தியிருக்கும் சூரியின் நடிப்பில் குறையில்லை. காதலையும், அது தரும் கிரக்கத்தையும், சிறிது மர்மத்தையும் கலந்து தரும் கதாபாத்திரத்திற்கு அஞ்சலி கச்சிதமான தேர்வு.
பல ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த படம். இத்தனை ஆண்டுகள் தாமதம் ஆனது ஏன் என்பதை படத்தின் காட்சிகள் சொல்லும். மழைக்காலத்து ரெயில் பயணம், தனிமையான பயணத்தின் அனுபவம், ரெயிலையே வாழ்வாதாரமாக்கி கொண்ட ஒரு எலியின் குடும்பம். இதெல்லாம் ஒரு தயாரிப்பாளரின் பட்ஜெட்டிற்கு எளிதானதல்ல.
காலம் கடந்து கொண்டாடப்பட்ட படங்கள் தமிழில் நிறைய உண்டு. இந்தப் படத்தையும் அப்படி ஆக்கி விடாமல். தியேட்டரிலேயே கொண்டாடுங்கள்.
ஒரு முறை பார்த்து விட்டால்… பல இரவுகள் படத்தை மனதிற்குள் ஓட்டிப் பார்ப்பீர்கள். பல அற்புதமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.
மக்களை ஆழ்ந்து சிந்திக்க வைக்க கிறிஸ்டோபர் நோலனால் மட்டுமல்ல நம்ம ஊர் ராமாலும் முடியும்.