ராபர்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் பி. ராபர்ட் ராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவபிரபு செல்வராஜ் இயக்கத்தில், இனிகோ பிரபாகர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மின்னும் ஓர் இரவு’ அஞ்சு கிருஷ்ணா அசோக், ‘பிக் பாஸ்’ சத்யா, சுப்பிரமணிய சிவா, சரவண சக்தி, ராஜன், உதயராஜ், ‘அருவி’ பாலா, யாசர், பிரதிக்ஷா, பசுபதி ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுரேஷ் குமார் சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பிரணவ் சூரஜ் இசையமைத்திருக்கிறார். வருகிற 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் தயாரிப்பாளர் டாக்டர் பி. ராபர்ட் ராஜ் பேசியதாவது: நாகர்கோவிலைச் சேர்ந்த நான், கடந்த ஆண்டு ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தேன். அதன் பிறகு இயக்குநர் சிவபிரபு என்னைச் சந்தித்து ‘மின்னும் ஓர் இரவு’ படத்தின் கதையைச் சொன்னார். கதை நன்றாக இருந்தது. ஒரு கிராமத்தில் ஓர் இரவில் ஒருவருக்குப் புதையல் கிடைக்கிறது. அது எப்படி கிடைத்தது? அது நல்லதா, கெட்டதா? என்பதுதான் கதையின் சுவாரசியமான அம்சம். அதன் பிறகு படத்தின் பணிகளைத் தொடங்கினோம்.
படத்தின் கதை முழுவதும் இரவில் நடைபெறுவதால், இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் இரவு நேரத்திலேயே நடைபெற்றது. நான் சில நாட்கள் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று படத்தின் பணிகளைப் பார்வையிட்டிருக்கிறேன். இது ஒரு நல்ல, இனிமையான பயணமாக இருந்தது. படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தின் பாடல்களும் நன்றாக இருக்கின்றன. ரசிகர்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறோம். என்றார்.