சினிமா இயக்குனராக வேண்டும் என்பதுதான் கதையின் நாயகன் ருத்தராவின் கனவு. அதே நேரத்தில் அடிக்கடி சண்டை போடும் அப்பா, அம்மாவை பார்த்து வளர்வதால் சண்டையே போடாத அன்பான மனைவி வேண்டும் என்பது இன்னொரு கனவு. அவருக்கு வரும் 3 காதல்களும் அவரது கனவை நிறைவேற்றதால் முரட்டு சிங்கிளாக இருக்கிறார்.
இதற்கிடையில் அவர் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கதை சொல்ல செல்கிறார். அவரோ நல்ல காதல் கதையாக சொல்லுங்கள் என்கிறார். இவர் தன் சொந்த காதல் கதையை சொல்கிறார். இது விஷ்ணு விஷாலுக்கு பிடித்து விட தோற்ற காதலை வெற்றியாக்கி விட்டு வாருங்கள் இந்த கதையை படமாக எடுக்கலாம் என்கிறார்.
இதனால் தன்னுடைய கடைசி காதலியான மீராவை தேடி செல்கிறார். ருத்ராவின் காதல் என்ன ஆனது. அவர் படம் இயக்கினாரா என்பது மீதி கதை.
மூன்று பருவங்கள், மூன்று தோற்றங்கள் என முதல் படத்திலேயே அழுத்தமான வேடத்தை துணிச்சலாக ஏற்று நடித்திருக்கிறார் ருத்ரா. குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டு நடுங்குகிற இடம், அதே ஆக்ரோஷமான குணத்தைத் தனது காதலனிடம் பார்த்து நடுங்குவது என சிறப்பாக நடித்திருக்கிறார் மீராவாக நடித்திருக்கும் மிதிலா பால்கர்.
தம்பிக்கு உதவியாக சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் விஷ்ணு விஷால். இயக்குநர் மிஷ்கின் மிஷ்கின்னாகவே வரும் இடங்கள் அதகளம். சித்தப்பாவாக கருணாகரன் சிரிக்க வைக்கிறார். ரெடின் கிங்ஸ்லி காமெடி கலகல ரகம்.
காதலின் உணர்வுகளையும் அழகாகப் பதிவு செய்கிறது ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு. இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினின் இசை, காதல் காட்சிகளுக்குக் கைகொடுக்கிறது. காமெடி, காதல், எமோஷன் என்ற பார்முலாவில் களமிறங்கி வெற்றியும் பெற்றிருக்கிறார், இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார்.