கெவி: மலை மக்களின் வலியும், வாழ்வும்

நான்கு புறமும் மலைகள் சூழ் பள்ளத்தாக்கில் ஒரு சிறுமலை மீதிருக்கும் சிறிய கிராமம் வெள்ளகேவி. அந்த காலத்திய அதிகாரவர்க்கத்தின் வரிச் சுமையை தாங்க முடியாமல் ஓடிவந்த மக்கள். அன்று வெள்ளைக்காரர்களை டோலியில் தூக்கி சுமந்தவர்கள் இன்று தன் மக்களை மருத்துவத்திற்காக தூக்கி சுமக்கிறார்கள்.

சாலை, மருத்துவ வசதி கேட்டு ஆண்டாண்டு காலமாக போராடும் மக்களை புறந்தள்ளி 5 ஆண்டுக்கு ஒரு முறை ஓட்டுப்பெட்டியோடு வருகிறார்கள் அரசியல்வாதிகள். அப்படி ஒரு முறை வரும்போது மக்களுக்கும், அவர்களுக்கும் இடையிலான மோதலில் கதையின் நாயகன் ஆதவன் மீது போலீஸ் அதிகாரி சார்லஸ் வினோத்திற்கு கடும் கோபம் வருகிறது. அதிகாரம் என்றால் என்ன என்று காட்ட முடிவெடுக்கிறார் அதிகாரி.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நாயகன் ஆதவனின் மனைவிக்கு வயிற்றில் உள்ள குழந்தையை கொடி சுற்றிக் கொள்கிறது. அவளை டோலியில் சுமந்து கொண்டு ஊர் மக்கள் மருத்துவமனை நோக்கி நடக்கிறார்கள். மறுநாள் மனைவி வளைகாப்பிற்கு பொருட்களை வாங்கி கொண்டு வருகிறான் நாயகன் ஆதவன் . அவனை பழிவாங்க பதுங்கி இருக்கிறது காவல் நாய்கன். அடுத்து என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை.

ஏஐ தொழில்நுட்பம் வந்த பிறகும் மருத்துவத்திற்கும், சாலைக்கும் போராடும் மலைமக்களின் வாழ்க்கையை அழுத்தமாகவும், வலியுடனும் சொல்லியிருக்கிறார், இயக்குனர் தமிழ் தயாளன். முரட்டு இளைஞனாகவே மாறியிருக்கிறார், ஆதவன். போலீசாரின் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகும்போது உருக வைக்கிறார். காடு மேடுகளில் செருப்பு அணியாமல் நடித்த அவரது உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட்.

மலைவாழ் பெண்ணாகவே வாழ்ந்துள்ளார், ஷீலா. படத்தின் பின் பகுதி முழுக்க பிரவச வலியால் துடிக்கிற நடிப்பு. பிரமாதப்படுத்தியிருக்கிறார். போலீஸ் அதிகாரி சார்லஸ் வினோத், பழிவாங்கும் குணத்தை கொடூரமாக்கி காட்டியிருக்கிறார் ஆடியன்சின் கோபம் அவர் மீது திரும்புவதே அவரது நடிப்புக்கான அத்தாட்சி. காயத்ரி, ஜாக்குலின் லிடியா, ஜீவா சுப்பிரமணியம் தங்கள் பங்கை இயல்பாக செய்திருக்கிறார்கள்.

பசுமையான மலைக் கிராமத்தையும், மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையையும் கண்முன் நிறுத்தியுள்ளார், ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெயசூர்யா. இரவு நேர காட்சிகளில் கடும் உழைப்பு தெரிகிறது. பாலசுப்ரமணியன்.ஜி, ரவிவர்மா ஆகியோரின் பின்னணி இசை படத்தை தாங்கி நிற்கிறது.

‘கெவி’ இந்த புவிக்கு சொல்ல வேண்டிய சில உண்மைகளை துணிச்சலுடன் பேசி இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.