எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் உருவாகியுள்ள படம், ‘வள்ளிமலை வேலன்’. இப்படத்தில் எம் நாகரத்தினம் நாயகனாக நடிக்க, இலக்கியா நாயகியாக நடித்துள்ளார். நான் கடவுள் ராஜேந்திரன், செந்தில், செம்புலி ஜெகன், சுரேந்தர், முத்துக்காளை, காவிரி மகிமா, கணபதி ஆகியோர் நடித்துள்ளனர். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ கே ஆல்ட்ரின் இசையமைத்துள்ளார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் நாயகி இலக்கியா பேசியதாவது: இது எனக்குக் கிடைத்த முதல் மேடை, காவிரி பாய்ந்தோடும் மண்ணில் பிறந்து, சென்னையில் வளர்ந்து, உங்கள் முன்னால் நாயகியாக நிற்கிறேன். நானெல்லாம் ஹிரோயின் ஆவேனா என நினைத்துள்ளேன். நான் சினிமாவுக்கு வந்து, 4 வருடங்கள் ஆகிவிட்டது, சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இப்போது ஹீரோயினாக நடித்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி.
சினிமாவில் நிறையப் பேர் குறுக்கு வழியில் முன்னேறுகிறார்கள், ஆனால் உண்மையாக உழைக்கும் திறமையாளர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. உண்மையான திறமையாளர்களுக்கு சினிமா கலைஞர்கள் அனைவரும் வாய்ப்பு தர வேண்டும். எனக்கு இப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் மிக மிக எளிமையாக இருப்பார். எனக்கு அருமையாகச் சொல்லித் தந்து நடிக்க வைத்தார்.
எல்லோரும் குடும்பமாகப் பழகினோம். நாகரத்தினம் சார் இந்த காலத்தில் இப்படி ஒரு ஆளா என்று ஆச்சரியப்பட வைத்தவர். அவர் ஊர் மக்கள் அவரை தலைவராக நேசிக்கிறார்கள். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. என்றார்.