‘சென்னை பைல்ஸ்: முதல் பக்கம்’ படத்தை ஓராண்டாக செதுக்கிய தயாரிப்பாளர்

சின்னத்தம்பி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்துள்ள படம் ‘சென்னை பைல்ஸ்: முதல் பக்கம்’ அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஜி ஆர் இசையமைத்திருக்கிறார்.

ஆகஸ்ட் 1ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான மகேஸ்வரன் தேவதாஸ், இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன், இயக்குநர் அனீஸ் அஷ்ரஃப், நாயகன் வெற்றி, நாயகி ஷில்பா மஞ்சுநாத், நடிகைகள் நயனா மற்றும் அனிகா, சண்டை பயிற்சி இயக்குநர் நூர், டிரெண்ட் மியூசிக் ஜித்தேஷ், பின்னணி பாடகி கரிஷ்மா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் , நடிகர் மகேஸ்வரன் தேவதாஸ் பேசியதாவது: 9 வயதில் நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் கமல்ஹாசனின் ரசிகன் நான். 11 வயதில் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தை தேர்வு நேரத்திலும் பார்த்தேன். ஆசிரியர் நடிப்பின் மீது கவனம் செலுத்தாதே என்று அறிவுரை சொன்னாலும் என் மனதில் அந்த ஆசை பதிந்திருந்தது. .
கொரோனா காலத்தில் நிறைய தமிழ் படங்களை பார்த்து என்னை தயார்படுத்திக் கொண்டேன். 46 வயதில் சிங்கப்பூரில் கட்டுமஸ்தான தேசிய ஆணழகன் என்ற பட்டத்தை வென்றேன். அதன் பிறகு இந்த உடலமைப்பை எப்படி எங்கு வெளிப்படுத்திக் கொள்வது என யோசித்தேன்.

எனக்கு வில்லன்களை மிகவும் பிடிக்கும் ‌ ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வில்லன்கள் தான் முதுகெலும்பு போல் இருப்பார்கள். நான் பேட்மேன் படத்தை பார்த்துவிட்டு வில்லனாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இன்று வரை நான் கில்லி, துப்பாக்கி, தனி ஒருவன் போன்ற படங்களை திரும்பத் திரும்ப பார்ப்பேன். விஜய்க்காக மட்டுமல்ல அந்தப் படத்தில் நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், ஹிந்தி வில்லன் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரின் வில்லத்தனமான நடிப்பிற்காக அந்தப் படங்களை பார்ப்பேன்.

எனக்கு தமிழ் திரையுலகம் பற்றி எதுவும் தெரியாது. இதற்காக இரண்டு ஆண்டுகள் ஹோம் ஒர்க் செய்தேன். தமிழ் திரையுலகில் எத்தனை துறைகள் இருக்கின்றன, அவை எப்படி இயங்குகின்றன என்பது குறித்து ஹோம் ஒர்க் செய்தேன். இதில் என்னை ஏமாற்றுவதற்கும் சிலர் முயற்சித்தனர். அதன் பிறகு தான் அஷ்ரஃப் அறிமுகமானார். அங்கிருந்து இந்த திரைப்படத்தை உருவாக்குவதற்கு இரண்டு ஆண்டுகளானது.

சரியாக திட்டமிட்டு பணியாற்றினால் நல்ல படத்தை வழங்க இயலும் என்பதில் உறுதியாக இருந்தேன். கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமா தான்.
இந்தப் படத்தில் முக்கியமான சோஷியல் மெசேஜ் இருக்கிறது. இதனை கிரைம் திரில்லர் ஜானரில் சொல்ல முடியும் என்பதை முதன்முதலாக முயற்சித்து இருக்கிறோம். அந்த வகையில் இது முதல் முயற்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தப் படத்தின் அனைத்து பணிகளையும் 2023ம் ஆண்டு டிசம்பரில் நிறைவு செய்தோம். அதன் பிறகு இப்படத்தினை நேர்த்தியாக செதுக்குவதற்கு ஓராண்டு காலம் எடுத்துக் கொண்டோம். ஏனெனில் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.