அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் சார்பில் கே. சுபாஷினி தயாரித்து வெளியிட்ட படம் ‘ஜென்ம நட்சத்திரம்’ . பி. மணிவர்மன் இயக்கி இருந்தார். தமன் ஆகாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். மால்வி மல்கோத்ரா நாயகியாக நடித்திருந்தார். அருண்கார்த்திக், ரக்ஷா ஷெரின், முனீஷ்காந்த் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இந்தப் படம் கடந்த ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியானது.
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிட்டிருந்தார். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது இந்த நிலையில் படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்னி தெரிவிக்கும் விழா நடந்தது.
இந்த நிகழ்வில் இயக்குநர் மணிவர்மன் பேசும்போது, “நினைத்ததை விட இந்தப் படம் நன்றாக போய் கொண்டிருப்பதால் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேரில் ஆடியன்ஸ் ரியாக்ஷன் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாரம் போலவே அடுத்த வாரமும் படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.
நடிகர் தமன், பேசும்போது“என்னுடைய முந்திய படமான ‘ஒரு நொடி’ அதன் பட்ஜெட்டை எங்களுக்கு திரும்ப கொடுத்தது. ஆனால், ‘ஒரு நொடி’ படத்தின் மொத்த பட்ஜெட்டை ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் மூன்று நாள் கலெக்ஷன் கொடுத்துள்ளது. இதற்கு ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் சாரின் ஆதரவு முக்கியமானது. படத்தை அருமையாக மார்க்கெட்டிங் செய்த அமோகம் பிக்சர்ஸூக்கும் நன்றி.
படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு படக்குழுவில் யாரும் சரியாக தூங்கவில்லை. ஆனால், படம் ரிலீஸ் ஆன பின்பு கலெக்ஷன் பார்த்த பின்புதான் நிம்மதியாக இருந்தது. தமிழ்நாட்டில் 150 திரையரங்குகளில்தான் முதலில் படம் திரையிட்டோம். மக்கள் கொடுத்த ஆதரவிற்கு பிறகு 200- 250 என்ற எண்ணிக்கையில் ஸ்கிரீன் எண்ணிக்கை அதிகரித்தார்கள். ஒவ்வொரு படத்திலும் கற்றுக் கொள்ள விஷயங்கள் இருக்கும். ஆனால், இந்தப் படம் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தது. ரசிகர்கள் மற்றும் மீடியா கொடுத்த ஆதரவிற்கு நன்றி” என்றார்.