பைசன்: ஜாதி படமல்ல… சாதித்த படம்

தனது முந்தைய படங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் வலியையும், வாழ்க்கையையும் பேசிய மாரி செல்வராஜ் இந்த படத்தில் அவர்களின் விடுதலைக்கான பங்கு ஆதிக்க சாதியிடமும் இருக்கிறது என்று அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறார்.
திருச்செந்தூரில் உள்ள வனத்தி என்கிற கிராமத்தைச் சேர்ந்த கிட்டானுக்கு (துருவ்) சிறுவயதிலிருந்தே கபடிதான் உலகம். ஆனால் கபடி விளையாட்டு வன்முறைக்கு அழைத்துச் சென்று விடும் என்கிற அவன் தந்தை பசுபதியின் பயமே அவனது கபடி கனவுக்கு தடையாக இருக்கிறது.

தென்மாவட்டங்களில் எப்போதுமே பட்டியலின மக்களின் பிரதிநிதியாக ஒருவரும், ஆதிக்க சாதி பிரதிநிதியாக ஒருவரும் ஆயுதம் தாங்கி மோதிக் கொண்டே இருப்பார்கள். அப்படி இந்த கதையில் பாண்டியராஜா (அமீர்) – கந்தசாமி (லால்) ஆகிய இரு கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் மோதல்களும், அவரது இளம் பருவத்தில் நடந்த கசப்பான அனுபவங்களுமே பசுபதியின் அச்சத்துக்கு காரணம்.
ஆனாலும் கிட்டானின் உடற்கல்வி ஆசிரியர் அவனுக்குக் கைகொடுக்க, அவன் கபடியில் சாதித்தானா, அல்லது சாதிக்கு பலி ஆனானா என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் பெரிய திருப்பமே துருவ்தான். முந்தைய படங்களில் தன் பலத்தை அறியாமலேயே இருந்த துருவ் இந்த படத்தில் ஆற்றாமை, கோபம், வெறி என உணர்வுகளை நாலு கால் பாய்ச்சலாகக் கொடுத்து, ‘அசல்’ கபடி வீரராகச் சடுகுடு ஆடியிருக்கிறார். வெவ்வேறு பருவங்களுக்கு அவர் கொடுத்திருக்கும் வித்தியாசங்கள், எதிர்பாராத ஆச்சர்யங்கள்.
தன் கால் மூழ்கிய ஜாதி சகதிக்குள் மகன் மூழ்கிவிடக்கூடாது என்பதற்காக மகனை தோளில் சுமந்து கரையேற்ற நினைக்கும் தெற்கத்தி தந்தையாகவே பசுபதி வாழ்ந்திருக்கிறார்.

ஜாதி சதுரங்க யுத்தத்தை நடத்துபவர்களாக வரும் அமீரும், லாலும், ஜாதிய தாதாக்களின் நிஜ முகங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். காதலின் தவிப்பை வெளிப்படுத்தும் அனுபமா பரமேஸ்வரன், தம்பியின் வெற்றியைக் காணத் துடிக்கும் ரஜிஷா விஜயன் ஆகியோர் அந்த மண்ணின் பெண்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். எல்லா காலத்திலும் வாழும் நடுநிலை மனிதனை கண்முன் நிறுத்துகிறார் அருவி மதன்.
வசனத்தில் சொல்ல வேண்டியதை கூட கேமராவில் சொல்கிறார், ஒளிப்பதிவாளர் எழில் அரசுன்.கே. இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில், ‘தீ கொளுத்தி’ பாடல் அனல் பறக்க, ‘சீனிக்கல்லு’ பாடல் கரையவைக்கிறது.

ஒரு கிராமிய கதையோடு, ஆசிய விளையாட்டு போட்டியையும் சமமாக இணைத்து திரைக்கதை அமைத்து, தனது அரசியலை மீண்டும் முன்னெடுத்து வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

Leave A Reply

Your email address will not be published.