‘திரௌபதி 2` இந்து -முஸ்லிம் மோதல் படம் அல்ல: இயக்குனர் மோகன் ஜி விளக்கம்

2016 ம் ஆண்டு வெளியான ‘பழைய வண்ணாரபேட்டை’ படத்தை இயக்கி அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020 ம் ஆண்டு ‘திரௌபதி’ திரைப்படத்தை இயக்கினார்.

இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும், மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது அதன் 2-வது பாகத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். ரக்சனா இந்துசூடன் ‘திரௌபதி தேவி’யாக நடித்துள்ளார். சரித்திர காலப் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 15ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில்,

இப்படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் இயக்குனர் மோகன் ஜி பேசியதாவது:

இது ஏற்கனவே வெளியான திரௌபதி படத்தில் நேரடியான இரண்டாம் பாகம் அல்ல. ஆனாலும் இரண்டு படத்திற்கும் ஒரு சின்ன தொடர்பு இருக்கிறது இந்த படத்தில் ரிஷி ரிச்சர்ட்ஸ் நடிக்க வந்ததால் இந்த தலைப்பு வைக்கப்பட்டது.

ஒரு முறை நான் காசிக்கு சென்ற போது அங்கு இருந்த ஒரு நந்தி பள்ளிவாசலை நோக்கி இருந்தது அதற்கான காரணத்தை விசாரித்த போது இந்து மதத்திற்கு எதிராக முகலாய மன்னர் செய்த காரியங்கள் சொல்லப்பட்டது.

சென்னை வந்த பிறகு அது குறித்து நிறைய யோசித்தேன். தமிழ்நாட்டிலும் முகமது பின் துக்ளக் அதுபோன்ற சில காரியங்களை செய்துள்ளார். அதை இங்கிருந்த மன்னர்கள் எதிர்த்து தடுத்துள்ளனர். இது பற்றிய நூலும் எழுதப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளேன்.

இந்த படம் ஹிந்து -முஸ்லிம் மோதலை பற்றி பேசவில்லை. இந்த படத்தை பார்க்கும் போது துருக்கியில் இருந்து வந்த முகலாய மன்னர்களுக்கும் இந்து மன்னர்களுக்கு இடையிலான போராட்டம் என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, இந்து முஸ்லீம் மோதலாக பார்க்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

நான் பிரச்சனைக்குரிய இயக்குனர் என்று என்னை சுற்றி ஒரு இமேஜ் கட்டமைக்கப்பட்டுள்ளது அதை மாற்றும் வகையில் இந்த படத்தை இயக்கி உள்ளேன். ஒரு வரலாற்றுப் படத்தை முப்பது கோடி ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில் 30 நாட்களுக்குள் குறைவான கால்ஷீட்டில் படமாக்கி உள்ளேன். இது ஒரு முன்னுதாரணம் ஆகும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.