மேயாதமான் , ஆடை, குலுகுலு ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ 29’ . விது, பிரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் பாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் சந்தானம்- கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனம் வருகிற 8ம் தேதி வெளியிடுகிறது.
படத்தினை ரசிகர்களுக்கு பிரத்யேகமாக அறிமுகப்படுத்தும் வகையில் ‘வெல்கம் டு தி வேர்ல்ட் ஆஃப் 29 ‘ எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் பி. எஸ். வினோத் ராஜ், கார்த்திக் யோகி ,பிராங்க்ளின் ஜோசப், அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர்கள் அருண் விஷ்வா, சினிஷ் , ராஜசேகர் பாண்டியன், மகேஷ் ராஜ் பஸ்லியான், நடிகர் ரியோ ராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசியதாவது: இந்த திரைப்படம் ஒருவரது சுய அடையாளத்தை பற்றி பேசுகிறது. அதற்கு பொருத்தமான ஆள் என்னைத் தவிர இந்த சூழலில் வேறு யாரும் இருக்க முடியாது. என்னை இப்போது மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்றால்… லோகேஷ் கனகராஜ் அவருடைய நண்பர் ரத்ன குமாருக்காக இப்படத்தை தயாரிக்கிறார் என்றனர் . கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விதுவிற்காக இப்படத்தை தயாரிக்கிறார் என்றனர். அப்படி என்றால் நான் என்ன செய்கிறேன்? என்று யோசித்தால்.. இதற்கு கார்த்திக் சுப்புராஜூம் லோகேஷ் கனகராஜும் தான் பதில் சொல்ல முடியும். அப்போதுதான் நான் யார்? என்பதை இந்த உலகத்திற்கு சொல்ல முடியும். இந்தப் படத்திற்கு நான் தான் தயாரிப்பாளர் என்று வடிவேலு ஒரு படத்தில் சொல்வதைப் போல் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. இதனால் இது ஒருவரது சுய அடையாளத்தை பற்றிய விசயங்களுக்குள் எளிதாக சென்று விடுகிறது. இதனை நான் சந்தோஷமாகத்தான் சொல்கிறேனே தவிர வருத்தப்பட்டு சொல்லவில்லை.
நான் -கார்த்திக் சுப்புராஜ்- லோகேஷ் கனகராஜ் -ஆகியோர் 2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். மூன்று கோடி ரூபாய் பட்ஜெட்டில் இருந்து.. 154 கோடி ரூபாய் பட்ஜெட் வரை பல படங்களில் பணியாற்றிருக்கிறேன். ஆனால் இங்குள்ளவர்கள் என்னை தயாரிப்பாளராக பார்த்ததே இல்லை. பார்க்கப் போவதுமில்லை. இந்த நிலையில் நான் இருக்கும்போது. இயக்குநர் ரத்னகுமார் சுய அடையாளத்தை பற்றி கேள்வியை எழுப்பி, ஒரு படத்தை எங்களிடம் சமர்ப்பிக்கிறார். இந்த கதையை கேட்ட பிறகு இதைவிட அழகாக சுய அடையாளத்தை பற்றியும் காதலைப் பற்றியும் யாராலும் சொல்லிவிட முடியாது. அதனால் இந்தப் படத்துடன் நான் உணர்வுபூர்வமாக தொடர்பு கொண்டேன்.
நாங்கள் இதுவரை 18 படங்களை தயாரித்திருக்கிறோம். இதில் எங்களுடைய பார்ட்னர்களுடன் இணைந்து என்ன மாதிரியான சினிமாவை தயாரிக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கிறோம். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் இருந்து எந்த மாதிரியான படங்கள் வெளியாகும் என்ற கேள்வி எழும்போது.. ஒரு பக்கம் கமர்சியலும் இருக்கும். மறுபக்கம் சொல்ல வேண்டிய கதைகளும் இருக்கும். நாங்கள் மற்றவர்கள் எளிதில் யூகிக்காத வகையிலான படங்களை தயாரிக்கிறோம். அத்துடன் புதுப்புது இளம் திறமைசாலிகளை கண்டறிந்து வாய்ப்புகளும் வழங்குகிறோம். அத்துடன் எங்களுடைய ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ என்ற பிராண்டு தான் முக்கியம் என்பதையும் உணர்ந்து இருக்கிறோம்.
லோகேஷ் கனகராஜுக்கு சத்தியமாக இதுவரை இப்படத்தின் கதை தெரியாது. அவர் இதுவரை நம்பிக்கையின் பேரில் மட்டுமே தொடர்ந்து முதலீடு செய்து வந்திருக்கிறார். எங்கள் மீது அத்தகைய நம்பிக்கையை வைத்ததற்காக லோகேஷ் கனகராஜிற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.லோகேஷ் கனகராஜ்- கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இரண்டு இயக்குநர்கள் இணைகிறார்கள் என்றால்… அந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு நிச்சயமாக இருக்கும். அதற்கு சரியான பதிலை அளிப்பது போல் இந்த 29 படம் இருக்கும்.