தனுஷ் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் ‘ஓம்’

அமரன் படத்திற்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், சாய் பல்லவி, மம்மூட்டி, ஸ்ரீலீலா நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘ஓம்’. சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார், படத்தின் டைட்டில் அறிமுக விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு இய’குனர் ராஜ்குமார் பெரியசாமி பேசியதாவது: ‘ஓம்’ என்பது ஆன்மிக சம்பந்தப்பட்ட தலைப்பு மாதிரி தெரிந்தாலும் இது உணர்வுப்பூர்வமான கதை. படத்தின் தலைப்புக்கும், கதைக்கும் பல லேயர்களில் அர்த்தம் இருக்கிறது. 65 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டோம். தனுஷ் நடித்த படங்களில் இந்த படம் தான் அதிக பட்ஜெட்டில் தயார் ஆகிறது.

அதற்கு நடிகர்கள், கதைக்களம் என பல காரணங்கள் இருக்கிறது. தவிர, சினிமா பிஸினசும் முன்பை விட அதிகரித்திருக்கிறது. கார்த்திகேயன் என்ற கேரக்டரில் மம்முட்டி நடிக்கிறார்.மற்றவர்களின் கேரக்டர்களை விரைவில் அறிவிப்போம். சூழ்நிலை காரணமாக மம்முட்டியை 6 மாதங்களாக என்னால் சந்திக்க முடியவில்லை. ஒருநாள் சென்னை வந்தவர் என்னிடம் கதை கேட்டார். அதில் அவருக்கு இருக்கக்கூடிய சந்தேகங்களையும் கேட்டார். உடனே நடிக்க ஓகே சொல்லிவிட்டார். தனுஷ், மம்முட்டி என 2 பேரும் தேசிய விருது பெற்றவர்கள். அவர்கள் தங்கள் கேரக்டரை உணர்ந்து அழகாக நடித்தனர். ஸ்ரீலீலா சம்பந்தப்பட்ட காட்சிகளை இப்போது எடுத்து வருகிறேன்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதியில் நடந்த செம்மரக் கடத்தல், என்கவுண்டர் சம்பந்தப்பட்ட கதையா என கேட்கிறார்கள். டீசரில் சில விஷயங்கள் காண்பித்து இருக்கிறோம். சில உண்மை சம்பவங்கள் பாதிப்பில் இந்த கதை உருவாகி இருக்கிறது.நான் இயக்கிய அமரன் ஒரு பயோகிராபி. ‘ஓம்’ அந்தவகை கதை தான். உண்மை சம்பவங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், அதை எப்படி திரைக்கதையாக கொடுக்கிறோம் என்பதில் வெற்றி இருக்கிறது. என்றார்.

Leave A Reply

Your email address will not be published.