இருமுடிகட்டு: அதிரடி அய்யப்பன்

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ரவி தேஜாவுக்கு ஐயப்பன் அருளால் அதிரிபுதிரி வெற்றிப் படமாக அமைந்திருக்கிறது ‘இருமுடிகட்டு’.

பொல்லூரு கிராமத்தில் திரிநாத் (ரவி தேஜா), தன் மனைவி காவேரி (பிரியா பவானி சங்கர்), மகள் மணியம்மாவுடன் (பேபி நக்ஷத்ரா) சந்தோஷமாக வாழ்கிறார். வாழை விவசாயம் செய்து வருகிறார். பெரும் குடிகாரரான அவர் ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனுக்கு மாலை போடும் தீவிர பக்தர். மாலை போட்டிருக்கும்போது மதுவைத் தொடமாட்டார், ஆனால் மாலை கழற்றியதும் குடிப்பார்.

மகள் மணியம்மா என்றால் அவருக்கு உயிர், உலகம் எல்லாம். அவருக்கு ஒரு பிரச்சினை வரும்போது ரவிதேஜா என்ன அவதாரம் எடுக்கிறார் அதன் பிறகு நடக்கும் மர்மமான சம்பவங்கள்தான் படத்தின் கதைக்களம்.

ரவி தேஜா படம் என்றாலே மாஸ், காமெடி, ஆக்ஷன் என அனல் பறக்கும். இந்த படத்தில் இது எல்லாமே இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் ரவி தேஜா தெரிய மாட்டார், திரிநாத் என்ற கதாபாத்திரமாக தான் தெரிவார். அதுதான் இந்தப் படத்தின் பெரிய பலம். சண்டையில் ஆக்ரோஷம் காட்டும் அதே நேரத்தில் மகள் செண்டிமெண்டில் உருகவும் வைக்கிறார். அப்பா-&மகள் சென்டிமென்ட் காட்சிகளில் இயக்குநர் சிவா நிர்வாணா படத்துடன் ஒன்ற வைக்கிறார்.

மகளாக நடித்த பேபி நக்ஷத்ரா சிறப்பாக நடித்துள்ளார். இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி படத்திற்கு பெரிய பலம். மனைவியாக வரும் பிரியா பவானி சங்கர், அடக்கமாக வந்து செல்கிறார். எம்.எல்.ஏ-வாக ரமேஷ் இந்திரா, டீச்சராக ஸ்வஸிகா, வில்லனாக அஜய் கோஷ் என அனைவரும் தங்கள் பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். குருசாமியாக வரும் சாய்குமாரின் பாத்திரத்தில் உள்ள ட்விஸ்ட் எதிர்பாராதது.

ஜி.வி. பிரகாஷின் இசையில் ஐயப்பன் பாடல்களில் பக்தி மணம் கமழ்கிறது. ஐயப்ப பக்தர்களின் பின்னணியில் ஒரு அப்பா–மகள் பாசப் போராட்டத்தை சொல்லும் அதே நேரத்தில். பெண் குழந்தைகளை பயத்துடன் அல்ல, தைரியத்துடன் வளர்க்க வேண்டும் என்ற மெசேஜை சொல்கிறது. குடும்பத்துடன் கட்டலாம் இருமுடி.

Leave A Reply

Your email address will not be published.