கீதா ஆர்ட்ஸ்- ராக் லைன் என்டர்டெய்ன்மென்ட் – பென்னி வாசு பிலிம்ஸ் – ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த் – ராக்லைன் வெங்கடேஷ்- பென்னி வாசு ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் எம்.எஸ் பாரரத்னா விருது பெற்ற இசை கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக் இது. இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமி கேரக்டரில் ராஷ்மிகா மந்தனா நடி’கிறார். படத்தின் துவ’க விழா சென்னையில் உள்ள மியூசிக் அகாடமி அரங்கத்தில் நடைபெற்றது. இதில் எம் .எஸ். சுப்புலட்சுமியின் குடும்ப வாரிசுகளும் , அவருடைய நலம் விரும்பிகளும், திரை உலகத்தை சார்ந்த தயாரிப்பாளர்களும், முன்னணி நட்சத்திர நடிகர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், படத்தை தொடங்கி வைத்து கமல்ஹாசன் பேசியதாவது: நான் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும்போது அந்த வாழ்க்கை அப்படியே தொடருமா? என்றெல்லாம் தெரியாது. வேடிக்கைக்காக என்னுடைய அப்பா சினிமாவிற்கு அனுப்பி வைத்தார். படிக்க வேண்டும் என்று சொன்னார். எனக்கு படிப்பு வரவில்லை. அதன் பிறகு தான் எனக்கு இசை என்றால் என்ன என்பது புரிய தொடங்கியது. படிப்பு வரவில்லை என்றதும் எது புரிந்ததோ அதை செய்யலாம் என்று எண்ணினேன். அதன் பிறகு இசை புரிந்ததால் அதைத் தொடர்ந்தேன். ஆனால் அதிலும் எனக்கு பிரமாதமாக வரவில்லை.
அதன் பிறகு தேடித்தேடி டான்ஸ் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு டான்ஸ் அசிஸ்டன்டாக இருந்து, அசிஸ்டன்ட் டைரக்டர் ஆகி கிளாப் அடித்தேன். அதன் பிறகு இப்போது மீண்டும் கிளாப் அடித்திருக்கிறேன். இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
எம் எஸ் அம்மா – இசையின் ஒன்றிணைக்கும் சக்தி. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவின் குரல். அவர் தமிழ், சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் பாடியுள்ளார். தமிழ்- தெலுங்கு- கன்னடம் என எல்லா மொழிகளிலும் அவருடைய உச்சரிப்பு உன்னதமானது. இது இன்றும் என்னைப் போன்றவர்களுக்கு பாடமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் அவர் குரலில் ஒலித்த ‘ரங்க பூர்வ விஹாரா..’ பாடலை கேட்டிருப்பார்கள். சுப்ரபாதத்தை ஆலயங்களில் தினமும் ஒலிக்க விடுகிறார்கள். லலிதா சகஸ்ரநாமம் என பல பாடல்களாக இருக்கட்டும். இவற்றையெல்லாம் விட ‘ரங்கபூர்வ விஹாரா..’ பாடலை கேட்கும் போது மனதிற்கு ஒரு சின்ன சந்தோஷ உணர்வு பரவும்.
நான் அவர்களை ரசிகனாக தான் பார்த்திருக்கிறேன். அவர்களை அருகில் இருந்து பார்ப்பதற்கு அனுமதி இல்லை. எனக்கு அதற்கான அருகதையும் இல்லை. இந்த விழா அரங்கத்திற்கு அருகே சின்னதொரு மியூசிக் அகாடமி இருக்கிறது. அவர்தான் பாலமுரளி கிருஷ்ணா. அவரிடம் தான் நான் இசையை கற்றுக் கொண்டேன். அவர் பலமுறை எம்.எஸ். அம்மாவை பற்றி பேசுவதை கேட்டிருக்கிறேன். அப்போதுதான் எம் எஸ் அம்மாவின் பெருமையை புரிந்து கொள்ள முடிந்தது.பிறகு நான் ‘ஹே ராம்’ படத்தை உருவாக்கும் போது அவர்களை சந்திக்க நேர்ந்தது. சுயநலமாகத்தான் அவர்களை சந்தித்தேன். ‘ஹே ராம்’ படத்தின் பாடலை அவர்தான் பாட வேண்டும் என விரும்பினேன். ஏனெனில் என்னுடைய நாயகனான கரம் சந்த் காந்தியை பற்றிய படத்தில் அவருடைய குரல் இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் அந்த விருப்பம் நிறைவேறவில்லை. ஏனென்றால் அவருக்கு அந்த தருணத்தில் உடல்நலக்குறைவு இருந்தது. அந்த வீட்டில் இருந்து கிடைத்த பரிந்துரையின் அடிப்படையில் தான் நான் டி கே பட்டம்மாளை சந்தித்தேன். அவர்களுக்கும் உடல் நலம் சரியில்லை. இருப்பினும் அவர்களை சக்கர நாற்காலியில் அமர வைத்து அவருடைய குரலை பதிவு செய்தோம்.
நான் எம் எஸ் அம்மா- டி கே பட்டம்மாள்- எம்எல் வசந்தகுமாரி – ஆகிய மூன்று சக்தி வாய்ந்த ஐகானிக் பெண்மணிகளிடம் நெருங்கி பழகியுள்ளேன். இந்த மூவரும் என் தலையை தொட்டு ஆசீர்வதித்திருக்கிறார்கள். அதனால் தான் இவர்கள் கேட்டதும் இந்த நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்டேன். இது எனக்கு கிடைத்த கௌரவம்.இந்தப் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநருக்கும், இசையமைப்பாளருக்கும் குறிப்பாக அனிருத்துக்கும் வாழ்த்துக்கள்.
எப்படி பாலச்சந்தருக்கு ‘அரங்கேற்றம்’ படத்தின் மூலம் திடீர் திருப்பம் ஏற்பட்டதோ, எப்படி இயக்குநர் கே விஸ்வநாத்திற்கு ‘சங்கராபரணம்’ படத்தின் மூலம் திடீர் திருப்பம் ஏற்பட்டதோ, இந்தப் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அனிருத்தின் திரையிசை பயணத்திலும் மிகப்பெரிய மாற்றமும், திருப்புமுனையும் ஏற்படும். இந்தப் படத்தின் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை அனிருத் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் அவர் தற்போது செல்லும் பாதையை நான் நன்கு அறிவேன். இயக்குநர் கௌதமிற்கு இது மிகப்பெரிய பொறுப்பு. இதற்காக நீங்கள் உயிரை கொடுக்க வேண்டாம். கடுமையாக உழைத்தால் போதும். இந்த படத்தில் தவறு நேராது. ஏனெனில் இப்படத்திற்கான திரைக்கதையை எம்எஸ் அம்மா எழுதிவிட்டு சென்றிருக்கிறார்கள். அதை மெருகேற்றினால் போதும். இயக்குநரின் பணியை எம்எஸ் அம்மா எளிதாக்கி விட்டு சென்றிருக்கிறார்.
எம் எஸ் அம்மா பூஜைக்கு உரியவர்கள் என்பதை விட.. நம் அனைவரின் பிரியத்திற்கு உரியவர்கள். அதை நீங்கள் திரையில் காண்பிக்க வேண்டும். இங்கு அவர்களை வணங்குவதற்கு நிறைய பேர் உள்ளனர். அவர்கள் காட்டிய அன்பு – பாசம்- அதைத்தான் திரையில் காண்பித்திட வேண்டும்.
இந்தியாவின் பான் இந்திய லேடி சூப்பர் ஸ்டார் எம் எஸ் அம்மா தான். அவர்களிடம் ஏராளமான திறமை இருந்தது. அவர்கள் நடிகை மட்டுமல்ல வீணை வாசிப்பார்கள், நடனம் ஆடுவார்கள்… ‘மீரா’ படத்தின் பாடல்கள் இன்றும் நம் அனைவரின் காதுகளிலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
மைக்கேல் ஜாக்சனின் படத்தை உருவாக்கும்போது அந்த நடிகருக்கு எவ்வளவு பதட்டம் இருந்திருக்கும். அந்த பதட்டம் ரஷ்மிகாவிற்கும் இருக்கும். அதனை களைவதற்கு அருமையான குழுவும் இருக்கிறது. அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
என்னால் ‘அவ்வை சண்முகி’ போன்ற வேடத்தை போட்டு நடிக்க முடியும். ஆனால் எம்.எஸ். அம்மாவாக ஒருபோதும் நடிக்க முடியாது. அதனால் இந்த கதாபாத்திரத்தை நீங்கள் ஏற்று தைரியமாக நடியுங்கள்.
எம் எஸ் அம்மா இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்மணி. குறிப்பாக தென்னிந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்மணி.
இசை அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் வாய்ந்தது. அதிலும் எம் எஸ் அம்மாவின் குரல் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் பெற்றது. அவரது சுயசரிதையை உருவாக்குவதால் இந்தியா பெருமை கொள்கிறது. குறிப்பாக தமிழகமும் பெருமை கொள்கிறது. இந்தப் படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டதை நான் இந்தியனாகவும் பெருமிதம் கொள்கிறேன்’. என்றார்.