குடும்பத் தலைவியாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் ஒரு கனவு இருக்கிறது. ஆனால் ஆண்கள், அவர்களை சமையலறைச் சிறையிலிருந்து விடுவிப்பதே இல்லை. அதனால் அந்த கனவுகளை அவர்கள் தங்களுக்குள்ளேயே புதைத்து விடுகிறார்கள். தையல் கற்க வேண்டும், ஓவியம் கற்க வேண்டும், டைப்ரைட்டிங் கற்க வேண்டும் என்கிற சின்ன கனவுகளைகூட சிதைத்து விடுகிறார்கள்.
‘போகப்போக எல்லாம் பழகிவிடும்’ என்பதைபோல, கணவனுடன் படுத்து எழுந்து இரண்டு பிள்ளைகளுக்கு தாயான பிறகு தனது ஆயுட் காலத்தையும் ஒரு குறுகிற வட்டத்திற்குள் அடைத்துக் கொள்கிறார்கள். பிள்ளை பாசம், பேரன் பேத்திகள் பாசம் என்கிற சின்ன சின்ன விஷயங்களிலேயே திருப்தி அடைந்து விடுகிறார்கள். இந்திய சமூகத்தில் இன்றைக்கும் இதுதான் நிலமை.
திருமணமான முதல் இரவிலேயே ‘விண்வெளிக்கு செல்ல வேண்டும்’ என்கிற தன் மனைவியின் கனவை அறிந்து கொள்ளும் கணவன், அவளின் லட்சியத்தை நிறைவேற்ற தன் வாழ்க்கையை எந்த அளவிற்கு தியாகம், செய்கிறான் என்பதுதான் ‘ஆகாஸ்லமுலு ஒக்க தாரா’என்கிற தெலுங்கு படம். தமிழில் ‘ஆகாயத்தில் ஒரு தாமரை’ சுருக்கமாக (AOT).
விக்ரமன் படம் மாதிரி ஒரே பாட்டில் நாயகி விண்வெளி செல்வதில்லை. நாயகியின் அறிவு, உழைப்பு, நாயகனின் தியாகம், முயற்சி இவை கூட்டாக பயணித்து நாயகி ஆகாயத்தை எப்படி தாண்டுகிறாள் என்கிற திரைக்கதைதான் படம்.
ஒரு திரைக்கதையின் பலவீனமான ‘தற்செயல்கள்’ இதில் இருந்தாலும், இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையாக அதை கருதிக் கொண்டால் அற்புதமான ஒரு திரை அனுபவத்தை பெறலாம்.
இந்த படம் வெறும் கதை சொல்லும் தொலைக்காட்சி தொடராகிவிடும் வாய்ப்புகள் நிறையவே உண்டு. ஆனாலும் இந்த ஒன்லைன் கதையை சுவாரஸ்யமான சின்ன சின்ன திருப்பங்களுடன் தந்திருக்கிறார்கள்.
விண்வெளி காட்சிகள், அதற்கான தயாரிப்புகள், பயிற்சிகள், ஆகாயத்திலிருந்து பூமியை பார்க்கும் அனுபவம் என பெரிய பொருட்செலவில் ஒரு பக்கா கமர்ஷியல் படத்திற்கான விஷயங்களை அற்புதமாக சேர்த்திருக்கிறார்கள்.
நுட்பமான விண்வெளி விஞ்ஞானத்தை சிறுவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் கதையோடு இணைத்து சொல்லியிருப்பது இன்னும் சிறப்பு.
மனைவி அருகில் இருந்தும் அவளுடன் சேர முடியாத விரகதாப பாடல், ஒரு பார்ட்டி சாங், கிராமத்து மாணவியின் பாவாடை தாவணி பாடல் என எந்த சினிமா கிளிஷேக்கும் இல்லாமல் கதையை அதன் போக்கிலேயே விட்டு, இசையை பின்னால் தூக்கி சென்றிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
பழுதுபட்ட கிராமத்து சாலையின் பள்ளத்தையும், அந்த பள்ளத்தில் தெரியும் ஆகாயத்தையும் அற்புதமாக கண்ணுக்குள் கொண்டு வந்து வைக்கிறார் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்.
இது ஒரு நாயகியின் கதைதான். ஆனாலும் ஹீரோ துல்கர் சல்மான் நாயகி சாத்விகா வீரவல்லிக்கு முழு இடத்தையும் கொடுத்து ஒரு டிரைவராக ஒதுங்கி நின்றிருப்பது அவரை ஹீரோக்களின் ஹீரோவாக உயர்த்திப் பிடிக்கிறது.
‘அறிமுகம்’ என்கிற சுவடே தெரியாமல் கனவுகளை சுமக்கும் மாணவி, பொறுப்புகளை சுமக்கும் குடும்பத் தலைவி, ஆகாயத்தில் பறக்கும் விண்வெளி வீராங்கனை என மொத்த படத்தையும் தலையில் சுமந்து நல்லதொரு வருகையாக திரையுலகில் கால்பதித்திருக்கிறார் சாத்விகா.
பிரேமா இஷ்க் காதல், சாவித்ரி, சேனாபதி படங்களை இயக்கிய பவன் சதினேனி இந்த படத்தின் மூலம் தன் உயரத்தை ஆகாயத்தை நோக்கி விரித்திருக்கிறார்.
கனவுகளை துரத்தும் குழந்தைகளோடு அவசியம் பார்க்க வேண்டிய படமாகி இருக்கிறது. ஓடிடி வெளியீட்டுக்காக காத்திருக்க வேண்டாம். படத்தின் கடைசி 30 நிமிடங்கள் வரும் விண்வெளி காட்சிகள் தியேட்டரில் கண்டு களிக்க வேண்டியவை.
ஆண்டுக்கு ஒரு படம் பார்ப்பேன் என்கிறவர்கள்கூட அவசியம் காண வேண்டிய படம்.