அந்தரன்: அதிர வைக்கும் திரில்லர்.

திரில்லர் படங்கள்தான் தற்போது மினிமம் கியாரண்டி படங்கள். அந்த வரிசையில் வந்துள்ள வித்தியாசமான பரபரப்பான படம் இது.
நாயகி இவானாவை திருமணம் செய்ய வரும் ஒவ்வொருவரும் மர்மமான முறையில் செத்துப்போகிறார்கள். அதற்கு காரணம் என்ன? யார் என்பதுதான் படத்தின் திரைக்கதை. கொலையாளி யார் என்பது நிச்சயமாக எவராலும் யூகிக்க முடியாத ஒன்றுதான். அப்படியான ஒரு கதாபாத்திரம் இதுவரை தமிழ் சினிமாவில் வந்ததில்லை. இந்த தொடர் கொலை வழக்கை விசாரிக்க வருகிறார் போலீஸ் அதிகாரி பிரஜின். அவரும் இவானாவை திருமணம் செய்து கொள்ள விரும்ப அதன் பிறகு நடப்பது மீதி கதை.

போலீஸ் அதிகா£ரி கேரக்டராக இருந்தாலும் அமைதியான நடிப்பை தந்திருக்கிறார் பிரஜின். ஒவ்வொரு தடயத்தையும் ஆராயும் அதிகாரியாக இயல்பாக பொருந்தியிருக்கிறார். குறிப்பாக விசாரணை முன்னேறும்போது அவரது முகபாவனைகள், சந்தேகங்கள், குழப்பங்கள் அனைத்தும் கதையோடு ஒன்றிப்போகின்றன.
இவானா, கதையின் இதயமாக இருக்கிறார். தன்னைச் சுற்றி நடக்கும் மர்ம மரணங்களால் மனதளவில் உடைந்த பெண்ணின் வேதனையையும், எதிர்காலம் குறித்த அச்சத்தையும் மிக இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். காதலும் பயமும் ஒன்றாக கலந்த அவரது நடிப்பு, கதைக்கு வலு சேர்க்கிறது. மகளின் வாழ்க்கையை நினைத்து தவிக்கும் தந்தையாக எம்.கே.சாம்பசிவம் மனதைத் தொடுகிறார். அனுபமா குமார், செந்தி குமாரி ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

வழக்கமான படமாக துவங்கினாலும் போகப்போக திரைக்கதையில் அதிரடியாக கவனம் செலுத்தி உள்ளார் இயக்குநர் சந்தோஷ் ராவணன், ஒவ்வொரு காட்சியிலும் புதிய கேள்விகளை உருவாக்கும் விதத்தில் திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார். முதல் பாதியில் விதைக்கப்படும் சிறு சம்பவங்கள், இரண்டாம் பாதியில் ஒன்றன்பின் ஒன்றாக இணையும் விதம் சுவாரஸ்யமாக அமைகிறது. க்ளைமாக்ஸ் வரை உண்மையான குற்றவாளியை யூகிக்க முடியாதபடி திரைக்கதையை கட்டமைத்திருப்பது இயக்குநரின் பலம்.

கிஷோர் ராமச்சந்திரனின் ஒளிப்பதிவு, ஹரி எஸ்.ஆரின் இசை இயக்குனருக்கு பக்க பலமாக இருந்திருக்கிறது. அந்தரின் மர்மம் நிச்சயம் பார்வையாளர்களை அதிரவைக்கும்.

Leave A Reply

Your email address will not be published.