GDN: குடும்பத்தோடு அவசியம் காண வேண்டிய படம்

இந்தியாவின் எடிசன் என்று புகழப்பெற்ற ஜிடி.நாயுடுவின் வரலாற்று திரைப்படம். தமிழில் அதிக பட்ஜெட்டில் உருவான சமூக பயோபிக் படம் என்று இதனை குறிப்பிடலாம்.
1900களின் தொடக்கத்தில், கோவை மாவட்டத்தின் கிராமம் ஒன்றில், பருத்தி வேளான் செய்யும் விவசாயியாக இருக்கும் இளைஞர் ஜி.டி.நாயுடுவுக்கு (டீஜே அருணாசலம்) பிரிட்டிஷ் அதிகாரி பயன்படுத்தும் மோட்டர் சைக்கிள் மீது ஆர்வம் வருகிறது. அந்த மோட்டார் சைக்கிளை வாங்கி அதன் மூலம் தொழில்நுட்பம் கற்று சின்ன சின்ன கருவிகளைத் தன் சொந்த முயற்சியால் கண்டுபிடிப்பதோடு, அவற்றை வைத்து தொழிலதிபராகவும் உயர்கிறார் ஜி.டி.நாயுடு.

அவரின் வளர்ச்சியைப் பிடிக்காத பிரிட்டிஷ் அதிகாரி, அவர்மீது பொய்க் குற்றச்சாட்டுகளையும் கட்டமைப்பதோடு, அதற்கு வருமான வரித்துறை அதிகாரி கிருஷ்ணனையும் பயன்படுத்துகிறார். இறுதியில் இவற்றை எல்லாம் ஜி.டி.என் எப்படி வென்று காட்டுகிறார் என்பதே கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியிருக்கும் ‘ஜி.டி.என்’ படத்தின் கதை.

அதீத அறிவு, இளகிய மனம், மனைவி மீதான காதல், ஆற்றாமையிலும் பிறழாத உறுதி என ஜி.டி.நாயுடுவின் நடுவயது வாழ்க்கையை நெருக்கமாகக் கொண்டு வந்திருக்கிறார் மாதவன். விடாத நேர்மை, ஜி.டி.என்-ஐ தோற்கடிக்கப் போராடுவது எனது தனது கதாபாத்திரத்தைத் அனுபவத்தாலும், பிரத்யேக உடல்மொழியாலும் ரசிக்கும்படி மாற்றி, இரண்டாம் பாதிக்கு வலுசேர்க்கிறார் ஜெயராம். நக்கல், நையாண்டி, சேட்டை, எமோஷன் எனத் தான் வரும் எல்லாக் காட்சிகளில் மின்சாரம் பாய்ச்சும் சத்யராஜ், படத்தை தூக்கிப் பிடித்திருக்கிறார்.

துஷாரா, கருணாகரன், முரளிதரன், பிரியாமணி ஆகியோர் கவனத்தில் நிற்க, வினய், தம்பி ராமையா, ஷீலா, அதீதி பாலன், மோகன் ராமன், ரமேஷ் திலக் போன்றோர் தங்கள் பங்கை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

கோவை கிராமங்களின் பசுமை, அக்கால மின்விளக்குகளின் எழில் போன்றவற்றை ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதன் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்-. கோவிந்த் வசந்தாவின் இசையில், ‘மனச பறிச்சாயே’ பாடல் மனதை வருடுகிறது. ஒரு நிறைவான படமாக வந்திருக்கிறது ஜிடிஎன்.

Leave A Reply

Your email address will not be published.