தி பாரடைஸ்: தரமான சம்பவங்கள் காத்திருக்கு: நானி

ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி, ஐவிஒய் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் இஷான் சக்சேனா ஆகியோர் தயாரித்துள்ள பான் இந்தி படம் ‘தி பாரடைஸ்’.

ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் நானி, கயாடு லோஹர், ராகவ் ஜூயால், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சம்பூர்ணேஷ் பாபு, தணிகல பரணி, ராஜா ரவீந்திரா, ராம் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சி. ஹெச். சாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை. இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் வருகிற 24ம் தேதி வெளியிடுகிறது .

இதை முன்னிட்டு படத்தின் தமிழ் பதிப்பு அறிமுக விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு நானி பேசியதாவது: நான் நல்ல நடிகரா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு ஒரு விசயம் மட்டும் தெரியும். நான் உங்களைப் போன்ற ஒரு நல்லதொரு பார்வையாளன்.

ஒரு பார்வையாளராக மாஸான திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அது போன்றதொரு திரைப்படங்கள் வெளியாவது குறைவு. அப்படி ஒரு பிரம்மாண்டமான மாஸான திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும் என ஆவலுடன் காத்திருக்கிறேன். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் திரைப்படம் தான் ‘தி பாரடைஸ்’.

ஒவ்வொரு ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இது போன்றதொரு மாஸான திரைப்படம் அவசியம் தேவை. இந்தப் படம் அப்படிப்பட்டதொரு திரைப்படம். இதை நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன். இதனை நீங்கள் 24 ஆம் தேதி திரையரங்குகளுக்கு வந்து, இந்த படத்தை பார்த்த பிறகு சொல்வீர்கள். இந்த படத்தில் அழுத்தமான எமோஷன்களை பற்றி பேசி இருக்கிறோம். அதே தருணத்தில் திரையரங்குகளில் பார்த்து ரசிக்கும் அற்புதமான அனுபவங்களையும் வழங்கி இருக்கிறோம்.

தமிழ் திரைப்படங்கள் எனக்கு ஒரு பைபிள் மாதிரி. என்னுடைய சினிமா அறிவிற்கும்… என்னுடைய சினிமா மீதான ஆர்வத்திற்கும்.. என்னுடைய சினிமா மீதான காதலுக்கும்… சினிமா மீது பிரியம் வந்ததற்கும்… தமிழ் சினிமாவில் உள்ள கலைஞர்கள் தான் இன்ஸ்பிரேசன். அதிலும் கமல்ஹாசன்- மணிரத்னம்- பாக்கியராஜ்- பாரதிராஜா- என பல சாதனையாளர்களை குறிப்பிடலாம்.

நான் ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வருகை தரும் போதெல்லாம் என்னுடைய திரை குடும்பத்திற்கு வந்தது போன்று உணர்வு எழும். எனக்கும், கடந்த காலத்தில் சென்னைக்கும், தமிழ்நாட்டிற்கும் நிறைய தொடர்பு உண்டு. என் மீது தமிழ் ரசிகர்கள் மட்டும் அன்பும் அதிகம். அதனை நான் பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன். நான் என்னுடைய படத்திற்கு தமிழில் பின்னணி குரலில் பேசுவதற்கு தமிழ் ரசிகர்கள் மீதான பேரன்பு தான் காரணம்.

என்னுடைய திரையுலக பயணத்தில் மிகவும் கடினமாக உழைத்த திரைப்படம் ‘தி பாரடைஸ்’. என்னுடைய திரையுலக பயணத்தில் நான் பெரிதும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் திரைப்படமும் இதுதான். நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன் 24ஆம் தேதி திரையரங்குகளில் உங்களுக்காக தரமான சம்பவம் காத்திருக்கிறது.

அடுத்த முறை நான் என்னுடைய படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக சென்னைக்கு வரும்போது, ரசிகர்கள் அனைவரும் என்னை ‘தி பாரடைஸ்’ படத்தில் நடித்திருக்கும் ‘ஜடல்’ என்ற கேரக்டர் பெயரை சொல்லித்தான் அழைப்பீர்கள்” என்றார்

Leave A Reply

Your email address will not be published.