இயக்குநர்களுக்கு தனிமனித ஒழுக்கம் வேண்டும்: தயாரிப்பாளர் எல்ரெட் குமார் பேச்சு

நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு 3வது வெற்றியை சுவைத்திருக்கிறார் சூரி. அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றுள்ள படம் ‘மண்டாடி ‘. இப்படத்தில் சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் மற்றும் ஸ்டன் சிவா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருந்தார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார். எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
ஆர். எஸ். இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட்குமார் தயாரித்திருந்தார்.

படத்தின் வெற்றி மகிழ்ச்சி பகிர்வுக் கொண்டாட்டம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. விழாவில் ஆர் எஸ் இன்போடெய்ன்மென்ட் நிறுவனத் தயாரிப்பாளர் எல்ரெட்குமார் பேசியதாவது: நான் ஒரு தயாரிப்பாளராக முதலில் என்னிடம் ஒப்பந்தமாகும் இயக்குநரிடம் ஒழுங்கு இருக்கிறதா என்று பார்ப்பேன். அது முக்கியமான முதல் புள்ளி. இன்று பல இயக்குநர்களிடம் அது இல்லை.அந்த ஒழுங்கில் தனிமனித ஒழுக்கம் தொடங்கி வேலையில் உள்ள அர்ப்பணிப்பு வரை வரும் இயக்குநர் மதிமாறன் கொடுத்த கமிட்மெண்ட்,உறுதிமொழி என்னவென்றால் நான் திரைக்கதையில் உள்ளதைத் தவிர ஒரு காட்சி கூட எடுக்க மாட்டேன் என்பதுதான்.

எடுத்ததை எடிட்டிங்கில் தூக்கி எறிய முடியாது . அப்படித் தேவைப்பட்டதை மட்டும்தான் எடுப்பேன் என்றார். அப்படியே செய்தார். கூடுதலாகப் பாடலுக்கு எடுக்க வேண்டும் என்று சில நாட்கள் நான் தான் எடுக்கச் சொன்னேன்.
திரைக்கதையில் என்ன எழுதியிருந்தாரோ அதைத்தான் இயக்குநர் எடுத்தார். எந்த மாற்றமும் செய்யவில்லை .

அது மட்டும் அல்லாமல் இது அவருக்கு முதல் படம் . சில ஃபார்மெட்டில் இதுதான் முதல் படம் .அதாவது ஐ மேக்ஸ் முறையில் இது முதல் படம் , டால்பி, ஹெச்டி எல்லாவற்றிலும் இது முதல் படம். இப்படிப் பல்வேறு தொழில்நுட்ப சவால்கள் இருந்தன. ‘ஒடிஸி’ போன்ற ஹாலிவுட் படங்களுக்கு மாஸ்டரிங் செய்பவர்கள் தான் இதற்கும் செய்தார்கள் . அவர்கள் ஐமேக்ஸ் செய்வது என்றால் நாங்களே வந்து மிக்ஸ் செய்வோம் ,கலர் கரெக்சன் செய்வோம் என்றார்கள் , மாஸ்டரிங் செய்வோம் என்றார்கள் .அதற்குப் படம் வெளியிடுவதற்கு 20 நாட்கள் முன்பாக முதல் பிரதியைத் தர வேண்டும் என்றார்கள்.அதுதான் அவர்களது நிபந்தனை. இப்படிச் சொல்கிறார்களே என்று மதியிடம் கேட்டபோது தைரியமாகக் கொடுக்கலாம் என்று சொல்லுங்கள் என்றார் . சரியாகத் திட்டமிட்டு 22 நாட்கள் முன்பாகவே கொடுத்து விட்டார். வெற்றிமாறன் சூரியைக் கதாநாயகனாக மாற்றினார்; மதிமாறன் அவரை மாஸ் ஹீரோவாக மாற்றி விட்டார்.

தமிழ்நாட்டில் ’தியேட்டர் விசிட்’ போகிற பழக்கம் குறைவு. ஆனால் தெலுங்கானா, ஆந்திரா எல்லாம் படம் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அங்கே திரையரங்கங்களுக்குச் சென்று வந்தது நல்ல அனுபவமாக இருந்தது. அதைப் பற்றி நிறைய பேசலாம். ஆனால் இந்தப் படம் ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறது. திரையரங்கங்களில் பார்ப்பவர்கள் எல்லாம் சூரி அண்ணா சூரி அண்ணா என்கிறார்கள். நடிகர் என்பதே மாறி அந்த கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லி அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
திரைப்படங்களில் ஏதாவது ஒரு கதாபாத்திரம்தான் பேசப்படும். இதில் அனைத்துக் கதாபாத்திரங்களும் பேசப்படுகின்றன. ‘மண்டாடி’ படத்தின் மூலம் செய்யப்பட்டுள்ள மாற்றம் இது .

இன்னொன்று வணிகப்படங்களுக்கென்று சில வடிவம் இருக்கிறது. அதை மாற்றி இருக்கிறீர்கள். கதாநாயகனுக்கு ஒரு அறிமுகப் பாடல் என்பதெல்லாம் இதில் கிடையாது . எளிமையாக ஓர் அறிமுகம் . அப்படி எளிமையான ஒரு கதைநாயகன். இதில் வணிக ரீதியாக செய்ய என்ன இருக்கிறது?ஆனால் இப்படம் ஒரு பெரிய வணிக ரீதியிலான படம் எந்த அளவுக்கு ஓடுமோ அப்படி ஓடுகிறது. இந்தப் படம் அனைத்து சென்டர்களிலும்திரையரங்கில் இருந்து வரும் வசூல் தகவல்கள் எல்லாம் அவ்வளவு ஊக்கமாக உள்ளன.

சூரி பற்றி ஒரு விஷயம், நான் ஒரு தடவை படப்பிடிப்புக்குப் போயிருந்தேன். கடலுக்குள் சென்று வந்து பயங்கர சோர்வாக இருந்தார் . சூரியண்ணாவுக்கு காலில் அடிபட்டு நடக்க முடியாமல் வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கே போயிருந்த என்னைப் பார்த்துக் கையைக் காண்பித்து ஒரு பத்து நிமிடம் காத்திருக்கிறீர்களா? என்று கேட்டார். நான் கொஞ்சம் உற்றுப் பார்த்தபோது பெரிய கூட்டத்தினர் நடுவே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். பிறகுதான் என்னைப் பார்க்க வந்தார். தப்பாக எடுத்துக் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றார். நான் சினிமாவில் பல இடங்களில் இருந்திருக்கிறேன். இது மாதிரி படப்பிடிப்புத் தளங்களில் ,இடங்களில் சின்னச் சின்ன நடிகர்கள், தொழிலாளிகள் அந்தக் கதாநாயகன் நம்மைப்பார்த்து ஒரு சிரிப்பு சிரிக்க மாட்டாரா என்று நினைப்பார்கள். ஆனால் இவர் அவ்வளவு தாழ்மையுடன் இருக்கிறார். அவர் எதற்கு ஏங்கினாரோ, அதைப் பக்கத்தில் உள்ளவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

நான் ஓய்வெடுங்கள் என்ற போதும் இப்படி அவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த அடக்கம் தான் அவரை எங்கோ கொண்டு சென்று இருக்கிறது. மேலும் கொண்டு செல்லும். கடைசிவரை இப்படி இருப்பார் என்று நினைக்கிறேன்.

சுஹாஸ், அதாவது சாட்டைப்புலி அலுவலகத்திற்கு ஹைதராபாத் சென்றிருந்தோம். அவர் சினிமாவுக்கு வந்தபோது எந்த நண்பர்களோடு இருந்தாரோ அத்தனை நண்பர்களுடன் ஓர் அலுவலகத்தில் இருந்தார். அவர்கள் வேறு வேறு துறைகளில் இருக்கிறார்கள். இவர்கள் எப்போதும் தன் பயணத்தில் இருக்கிறார்கள் என்றார் .அது போதும் இப்படியே இருங்கள் என்று கூறினேன்.

மஹிமா வரும் காட்சிகளில் தியேட்டர்களில் உணர்ச்சிவசப்படுகிறார்கள். எஸ்டிஆர் படத்தைப் பற்றிப் பாராட்டி இருந்தார்.அவர் பாராட்டிய காட்சிகள் எல்லாமே மஹிமா நடித்த காட்சிகள் தான். பால சரவணன் நடித்த டைமிங் காமெடி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

ஆக்சன் காட்சிகளில் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் எப்படி மேஜிக் செய்தார் என்றே தெரியாது . கதையை உள்வாங்கிக் கொண்டு கான்செப்ட்டை உள்வாங்கிக் கொண்டு செய்திருக்கிறார்.
உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே பட்டையைக் கிளப்பி இருக்கிறார் சத்யராஜ் சார் அவரது திரையிருப்பு படம் முழுக்க இருக்கிறது. படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி.அனைவருக்கும் வாழ்த்துக்கள். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.