லட்சுமி காந்தன் கொலை வழக்கு: தூக்கு தண்டனையும் ஒரு கொலையே

தூக்கு தண்டனை வேண்டுமா வேண்டாமா என்று விவாதம் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒரு கொலைக்கு இன்னொரு கொலை எப்படி தீர்வாகும் என்பது தூக்குத் தண்டனையை எதிர்ப்பவர்கள் கருத்து. பல நாடுகளில் தூக்கு தண்டனையை தடை செய்து விட்டார்கள். இந்தக் கருத்தை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன இப்போது வந்துள்ள படம் ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’. 1944ம் ஆண்டு நடந்த பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்குக்கும், இந்த கதைக்கும் சம்பந்தமில்லை.

1970களில் வசிக்கும் கிராமத்து ஏழைத்தாய் லிசி ஆண்டனியின் மகன் வெற்றி, வேலை கிடைக்காத விரக்தியில் சின்னச் சின்ன திருட்டுகளின் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்கின்றனர். இதற்கிடையில் வெற்றிக்கு, அந்த ஊரில் இருக்கும் பிரிகிடாவுடன் காதல் ஏற்படுகிறது. அந்த காதல் திருமணத்தில் முடிகிறது. தன் காதல் மனைவிக்காக இனி திருட்டு தொழிலை செய்யக்கூடாது என்று வெற்றி முடிவு செய்கிறார்.

இந்நிலையில், சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு கொலை குற்றவாளியாகி மரண தண்டனையை எதிர்கொள்கிறார். தூக்கிலிடுவதும் அரசு செய்யும் ஒரு கொலைதான் என்று ஆவேசப்படும் வெற்றிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதா என்பது மீதி கதை.

வெற்றி நடிப்பில் நல்ல முன்னேற்றம் யதார்த்தமாக நடித்துள்ளார். பிரிகிடா சாகா உணர்வுபூர்வமான காட்சிகளில் மிளிர்கிறார். லிசி ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மாறன், ‘பருத்திவீரன்’ சரவணன், கவிதா பாரதி, சுப்பிரமணியம் சிவா, ‘அருவி’ மதன், கன்யா பாரதி ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

ஒரு ஜெயில் அறை, ஒரு கோர்ட் ரூம், இந்த இரண்டிலுமே அதிக காட்சிகள் இருந்தாலும் அதையும் போரடிக்காமல் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் எம்.வி.பன்னீர்செல்வம். தர்புகா சிவாவின் இசை காட்சிகளுக்கு இசைவாய் ஒலித்திருக்கிறது

சட்டமும், நீதியும் குற்றவாளிகளை திருத்துவதற்கு பயன்பட வேண்டுமே தவிர, தண்டிப்பதற்கு அல்ல என்ற கருத்தை சமூக அக்கறையுடன் சொல்லியிருக்கின்றார் இயக்குனர் தயாள் பத்மநாபன். வசனம் வழியாக கதை சொல்லி உள்ள இயக்குனர் காட்சி வழியாக அதைச் சொல்லி இருந்தால் முக்கியமான படமாக இருந்திருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.