லவ் ஓ லவ்: காதலனாக காதலி மாறினால்…

வழக்கமான நடுத்தர குடும்பத்து நாயகன் பவிஷ். கண்டிப்பான அப்பா, அன்பான அம்மா, தோழியாய் ஒரு சகோதரி என எளிய வாழ்க்கை. ஆனால் பவிசுக்கு கண்டிப்பான சிங்கிள் மதரால் வளர்க்கப்பட்ட நாகதுர்கா மீது காதல் வரும்போதுதான் பிரச்சினையும் சேர்ந்து வருகிறது. வசதியாக வாழ்ந்து பழக்கப்பட்ட நாகதுர்கா, காதலனுக்கு அவன் பொருளாதாரத் தகுதிக்கு மேல் செலவு வைக்கிறாள். காதலில் உருகும் பவிசும் அதனை செவ்வனே செய்து தருகிறார்.

இடையில் காதலியின் அம்மா போலீசில் புகார் கொடுத்து அவன் குடும்பமே போலீஸ் ஸ்டேஷனில் அவமானப்படுகிறது அவன் வேலையை ஒழுங்காக செய்ய முடியவில்லை. கடன்காரர்கள் நெருக்குகிறார்கள். அடி உதைக்கு ஆளாகிறான். அவன் குடும்பமே அவமானத்தில் சிக்கி, ஊருக்குப் போய் விடுகிறது. ஒரு நிலையில் அவன் வேலையும் போய் விட, அப்போதும் காதலி செய்யும் டார்ச்சர் காரணமாக ஒரு நிலையில் அவன் அவளை அறைந்து விட, விஷயம் மாதர் சங்கம் வரை போகிறது. மாதர் சங்கத் தலைவி (வனிதா) போலீஸ் ஸ்டேஷன் வரை கொண்டு போகிறார்

போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராகவனிடம் பவிஷ் ஒரு கோரிக்கை வைக்கிறார் .”கடந்த நான்கு வருடங்களாக இவள் கேட்டதை எல்லாம் நான் எப்படி செய்தேனோ, அப்படி நான்கு மாதம் இவள் எனக்கு செய்ய வேண்டும். அப்படி செய்ய முடியாமல் போனால் இனி என்னை எப்போதும் தொந்தரவு செய்யமாட்டேன் என்று எழுதிக் கொடுத்து விட்டுப் போகவேண்டும்” என்கிறான் அவள் அதை ஏற்கிறாள் .இந்த சவாலில் வென்றது யார் என்பதே படம்.

“வேலையும் சம்பாத்தியமும் பெண்களுக்கு உரிமை; ஆனா ஆணுக்கு அது கடமை . என்னால ரெண்டையும் உணர முடியும் ” என்று சொல்லும் ஒரு திருநங்கையின் வாக்குமூலம், ‘ஆணும் பெண்ணும் சமம் என்று ஒரு ஆண் சொல்வதே ஆணாதிக்கம்தான்’ என படம் முழு க்க யதா£த்தம் பேசி இருக்கிறார் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன். கலர்புல்லான ஒளிப்பதிவில் கவர்கிறார் பி.ஜி.முத்தையா. பின்னணியில் உற்சாகமூட்டும் இசையமைப்பாளர் ஃபாக்ஸ்ன், பிரபல பாடல்களை ரீமிக்ஸ் செய்து அங்கும் பலம் சேர்க்கிறார் .

இயல்பாக நடிக்கிறார் பவிஷ். நடிப்பு, நடனம் இரண்டிலும் அசத்துகிறார் கன்னட சோஷியல் மீடியா செலிபிரிட்டியான நாக துர்கா . நடனத்தில் எல்லா ஸ்டெப்களையும் முழுமையாக ஆடுவது அழகு. செல்வராகவன் இயல்பான இன்ஸ்பெக்டராக வருகிறார். தனுஷ் நடித்த ‘தேவதையை கண்டேன்’ படத்தை திரும்ப பார்த்த உணர்வை தருகிறது படம். காதல் பட ரசிகர்களுக்கு கனிரசம் சொட்டும் அல்வா இந்த லவ்.

Leave A Reply

Your email address will not be published.