‘பேங் பேங்’ படத்தில் சண்டை போடாத 4 ஹீரோயின்கள்: தயாரிப்பாளர் கண்ணன் ரவி சுவாரஸ்யம்

கே.ஆர்.ஜி. குழுமம் சார்பில், கண்ணன் ரவி தயாரிப்பில், சாம் ரோட்ரிகஸ் இயக்கத்தில் பிரபுதேவா – வடிவேலு இணைந்து நடித்திருக்கும் படம் ‘பேங் பேங் ‘. பப்லு பிருத்விராஜ், அனு கீர்த்தி, யாவீ, பீட்டர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வேணு மற்றும் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசியதாவது: பிரபுதேவா என்னைச் சந்தித்து, ‘ஒரு புது இயக்குநர், ஜாம்பி கதை… கதையைக் கேட்டு வாய்ப்பு தாருங்கள்’ என்று சொன்னார். அந்தக் கதையைக் கேட்டவுடன் வித்தியாசமாக இருந்தது. இந்தக் கதையைக் கேட்ட பிறகு இயக்குநர் சாம் நிச்சயமாக அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிடுவார் என நம்பினேன். அவர் புது இயக்குநராக இருந்தாலும், அவருக்கான குழுவில் ஏராளமான திறமைசாலிகள் இணைந்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் வடிவேலு – பிரபுதேவா ஆகிய இருவரும் எந்தவித மறுப்பும் சொல்லாமல், அனைத்து விஷயங்களிலும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள். அவர்களுக்கும் நன்றி. இந்தப் படம் நிச்சயமாகப் பேசப்படும்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பை இந்தோனேசியாவில் நடத்தலாம் என்ற ஆலோசனையை நான்தான் முதலில் முன்வைத்தேன். என்னுடைய அதிர்ஷ்டம் என்னவெனில், கடந்த 20 ஆண்டுகளாக வெடிக்காத அந்தத் தீவில் உள்ள எரிமலை, படப்பிடிப்பிற்காகப் படக்குழுவினர் அங்கு சென்றிருந்தபோது வெடித்தது. அதனையும் படக்குழு படமாக்கியுள்ளது

இந்தப் படத்தில் நான்கு ஹீரோயின்கள். இவர்கள் அனைவரும் படத்தில் தான் சண்டை போட்டார்களே தவிர, படப்பிடிப்புத் தளத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். இந்தப் படத்தில் நான்கு ஹீரோயின்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

ஜாம்பி கதையாக இருந்தாலும், அந்தக் கதையை முழுமையாகக் கேட்டபின், டிக்கெட் வாங்கிப் படத்தைப் பார்க்கும் ரசிகர்களின் கோணத்திலிருந்து சில விஷயங்களைச் சொல்லி, சில திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று சொன்னேன். இயக்குநரும், படக்குழுவினரும் அதை ஏற்றுக்கொண்டு நல்லதொரு படைப்பாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப் படம் தான் உண்மையிலேயே கூட்டுத் தயாரிப்பு. படம் நன்றாக இருக்கிறது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.