போலீஸ் கான்ஸ்டபிள் நயன்தாராவுக்கு இரவில் விதவிதமான கனவுகள் வந்து பயமுறுத்துகிறது. அந்தக் கனவுகளில் அவரை ‘மயிலாஞ்சி’ என்னும் ஊருக்குச் செல்லச் சொல்கிறது ஓர் உருவம். தனது கனவை பற்றி அறிய டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு அந்த ஊருக்கும் செல்கிறார் நயன்தாரா.
அங்கு 2000 வருடம் பழைமையான ‘மூக்குத்தி அம்மன்’ கோயில் ஒன்றையும் அவர் கண்டுபிடிக்கிறார். 2 ஆயிரம் வருடத்திற்கு முன்பு அவர் மூக்குத்தி அம்மனாக இருந்து காதல் என்ற போர்வையில் அட்டகாசம் செய்த மந்திரவாதி ரெஜினா மற்றும் இளவரசர் துனியா விஜய்யின் கொட்டத்தை அடக்குகிறார். இதில் தவறுதலாக ஒரு கரு கலைய காரணமாகி விட்டதால்
தாற்காலிகமாக அம்மன் அவதாரத்தை கைவிட்டு சாதரண மனுஷியா வாழ்கிறார் மூக்குத்தி அம்மன்.
தற்போது 2000 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர்த்தெழுந்து வருகிறார் மந்திரவாதி ரெஜினா கஸாண்ட்ரா. இவராலும், இவருடைய முன் ஜென்மக் காதலனாலும் மூக்குத்தி அம்மனான நயன்தாராவிற்கு அடுக்கடுக்கான சிக்கல்கள் வருகின்றன. இதனைச் சமாளிக்க அவர் எடுக்கும் அம்மன் அவதாரமே இந்த படம்.
பயந்த சுபாவம் உள்ள கான்ஸ்டபிளாகவும், ஆங்காரமிக்க அம்மனாகவும் இருமுகம் காட்டியிருக்கிறார் நயன்தாரா. வில்லியாக ரெஜினா கஸாண்ட்ரா வில்லத்தனத்தைத் தட்டியெழுப்புகிறார். அவருக்கு நிகராக வில்லத்தனம் காட்டுகிறார் கன்னட நடிகர் துனியா விஜய். இவர்களைத் தாண்டி, ஊர்வசி, யோகி பாபு, வெங்கட் ராகவன், மைனா நந்தினி, லொள்ளு சபா சாமிநாதன் ஆகியோர் காமெடி செய்திருக்கிறார்கள்.
நேரடி ஒளிப்பதிவை விட கிராபிக்சில் மிரட்டுகிறார் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத். ஹிப்ஆப் ஆதியின் பின்னணி இசை படத்தை தாங்கி பிடிக்கிறது. மேக்கிங், திரைக்கதை, நயன்தாராவின் நடிப்பு இம் மூன்றும் பக்தி, அம்மன் என்பதை தாண்டி பிரமாண்ட பேண்டசி படமாக முத்திரை பதிக்கிறார் மூக்குத்தி அம்மன்.