ஜான் டோ: ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு திரில்லர்

ஜாலியான காதல் படங்களை இயக்கி வந்த மதுமிதா முதன் முறையாக ஒரு கிரைம் திரில்லரை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இங்கிலாந்து அமெரிக்கா, கனடா நாடுகளின் சட்டத்துறையில் அடையாளம் இல்லாத ஆண் பிணங்களுக்கு ‘ஜான் டோ’ என்று பெயர் . இதை மையமாக வைத்தே இந்த படத்தின் திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளது.
கேரளா – தமிழ்நாடு எல்லையில் உள்ள குறிஞ்சி மேடு மலைப்பகுதியில் கதை நடக்கிறது. ஒரு தந்தை அவரது மகள் சாரா, இரண்டாவது மனைவின் மகன் ஹிருதய் ஆகியோர் வெளிநாட்டில் இருந்து குறிஞ்சி மேடுக்கு வருகிறார்கள்.

வந்த இடத்தில் ஹிருதய் காணாமல் போகிறான். இதே ஊரில் நடந்த ஒரு கொலையை விசாரிக்க கேரளாவில் இருந்து வருகிறார் போலீஸ் அதிகாரி அர்ஜூன்தாஸ். காணாமல் போன ஹிருதய் வழக்கை விசாரிக்கிறார் தமிழ்நாட்டு போலீஸ் அதிகாரி ராவ் (சஞ்சனா நடராஜன்). இரண்டு வழக்குகளு’கும் தொடர்பு இரு’கிறதா? இரு போலீஸ் அதிகாரிகளும் இதனை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

குழந்தைகள் காணாமல் போகும் சம்பவம், அடையாளம் தெரியாத ஒரு சடலம், அதைச் சுற்றி நடக்கும் போலீஸ் விசாரணை என ஆரம்பத்திலேயே ரசிகர்களை மர்ம உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது படம். அந்த விறுவிறுப்பை கடைசி வரை தக்கவைத்துக் கொள்ளவும் செய்கிறது.

அப்பாவால் அவமானப்படுத்தப்படும் மகன், நேர்மையான, துணிச்சலான போலீஸ் அதிகாரி என இரு முகம் காட்டி நடித்திருக்கிறார் அர்ஜூன்தாஸ், சஞ்சனா நடராஜனும் அவருடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார். சிறுவன் ஹிருதயாக வரும் நீரவ் தனது நடிப்பால் கவனம் பெறுகிறார். அனுபமா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

மலைப்பகுதியின் இயற்கை அழகை மட்டுமல்லாமல், அங்கு நிலவும் ஒருவித அச்ச உணர்வையும் ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா ஜெயராமன் சிறப்பாகப் படம் பிடித்திருக்கிறார். முஜீப் மஜீத் மற்றும் ஆர்டிஸ்ட் 404 ஆகியோரின் பின்னணி இசை விசாரணைக் காட்சிகளுக்குப் பதற்றத்தைக் கூட்டுகிறது.

ஹாலிவுட் ஸ்டைலில் இன்வஸ்டிகேஷன் திரில்லர் படமாக கவனம் ஈர்க்கிறது படம்

Leave A Reply

Your email address will not be published.