சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தலைவன் தலைவி’ . வருகிற 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் படத்தின் அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன் பேசியதாவது: மூன்றாவது தலைமுறையாக திரைப்படங்களை தயாரித்து தயாரிப்பாளராக பணியாற்றி வருகிறோம். தொடர்ந்து ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘தலைவன் தலைவி’ அற்புதமான குடும்பத் திரைப்படம். இயக்குநர் பாண்டிராஜ் ஒரு சுயம்பு. அவருடைய தனிப்பட்ட முயற்சியில் மிகப் பெரும் இயக்குநராக உருவாகி இருக்கிறார். அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் தான். அவர் கதை சொன்னபோது அப்பாவுக்கு பிடித்திருந்தது. எங்களுக்கும் பிடித்திருந்தது.
விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. அவருடைய புகழ் இன்று சீனா வரை பரவி இருக்கிறது. அவர் நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் அங்கு இந்திய மதிப்பில் எண்பது கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. ஹாங்காங்கில் அவர் ஹாலிவுட் நடிகர் டென்செல் வாஷிங்டனுக்கு இணையாக புகழ் பெற்றிருக்கிறார். அந்த அளவிற்கு அவர் ரசிகர்களிடம் சென்றடைந்திருக்கிறார். கொல்கத்தாவிலும் அவரைப் பற்றி பேசுகிறார்கள். அவர்கள் ‘தமிழ் சினிமா என்றால் விஜய் சேதுபதி தான்’ என சொல்கிறார்கள். அவருடைய புகழ் எங்களுக்கு மிகவும் பொக்கிஷமாக இருந்ததுடன், அவருடன் இணைந்து பணியாற்றுவதும் பெருமிதமாக இருக்கிறது.
நித்யா மேனனை பற்றி குறிப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும், அவருடன் மிகப்பெரிய நட்சத்திர நடிகர் நடித்தாலும், அவருடைய தனி திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடிப்பவர். அவருடன் இணைந்து பணியாற்றுவதும் எங்களுக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறோம்.
இந்தப் படத்தில் பாடல்களை அனைத்தும் அற்புதமாக வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். புதிய புதிய ஓசைகளையும் கொடுத்திருக்கிறார். ஆதி கால தமிழர்களின் இசையை உலகத் தரத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறார்.
‘தலைவன் தலைவி’ மிகப்பெரிய கேளிக்கை படமாக அமையும். ரசிகர்களும், ஊடகங்களும் இந்த படத்திற்கு பேராதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.என்றார்.