என் மகனுக்கு ஆதரவு தாருங்கள்: ஆனந்த் பாபு உருக்கமான வேண்டுகோள்

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ‘உருட்டு உருட்டு’. நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா சின்னாலம்பட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு, நடேசன், அங்காடித்தெரு கருப்பையா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். யுவராஜ் பால்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களுக்கு அருணகிரி இசை அமைத்துள்ளார். கார்த்திக் கிருஷ்ணன் பின்னணி இசை அமைத்துள்ளார்.

படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் ஆனந்த் பாபு பேசும்போது “என் மகனின் படத்திற்கு வாழ்த்த வந்துள்ள திரையுலக பெரியவர்களான திரு விக்ரமன் சார், திரு கஸ்தூரி ராஜா சார், திரு ஆர்வி உதயகுமார் சார், அனைவருக்கும் நன்றி. இவர்களுடைய ஆசிர்வாதம் என் பிள்ளைக்கு கிடைப்பது மகிழ்ச்சி. இது எங்க அப்பா செஞ்ச புண்ணியம், நாகேஷ் ஐயாவுக்கான மரியாதையாக இது அமைந்துள்ளது.

உருட்டு உருட்டு படத்தை இயக்குநர் அழகாக செய்துள்ளார். என்னுடைய பையன் நாயகனாக நடித்துள்ளான். நான் நடித்த போது எனக்கு எப்படி ஆதரவு தந்தீர்களோ, அதே போல் என் பையனுக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி” என்றார்.

இயக்குநர் விக்ரமன் பேசியதாவது: இந்த விழாவில் பங்கு கொண்டது மகிழ்ச்சி. நான் நாகேஷ் சாரோடையும் வேலை செய்துள்ளேன். ஆனந்த பாபு கூடவும் வேலை செய்துள்ளேன். ஆனந்த பாபு புதுவசந்தம் படத்தில் நடித்தார். அந்த படத்துல உள்ள டான்ஸ் மூமெண்ட், போடு தாளம் போடு பாட்டு, அப்புறம் ஆடலுடன் பாடலை கேட்டு எம்ஜிஆர் உடைய பாட்டு, நான் ரீமிக்ஸ் பண்ணிருந்தேன்,

மனோவும் சுசீலாமா பாட வச்சு ஒரு நிமிடத்திற்கு செய்திருந்தேன். அதெல்லாம் ஆனந்த பாபுதான் டான்ஸ் ஆடுவார். கொரியோகிராபர்ல்லாம் வைத்துக்கொள்ளாமல். அவரே வீட்டில் போட்டு பார்த்து, அவர் டான்ஸ் கோரியோகிராஃப் பண்ணுவார். அந்தளவு திறமையானவர்.

நாகேஷ் சாருடன் வேலை பார்த்துள்ளேன், அவர் நடித்த காட்சி ஒன்று அதிக டேக் போனது, அன்று இரவு என்னிடம் வந்து, அதை திரும்ப எடுக்கலாம் நான் நன்றாக நடிக்கவில்லை என்றார். எனக்கு ஆச்சரியாமாக இருந்தது, எவ்வளவு பெரிய கலைஞன், ஒரு இயக்குநருக்கு பிடிக்க வேண்டும் என எவ்வளவு பாடுபடுகிறார், அதே போல் தான் ஆனந்த்பாபுவும்.

கஜேஷ் நீங்கள் அப்பாவையும் தாத்தாவையும் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். நன்றாக வருவீர்கள். ஹீரோயின் கன்னடம், கிட்டத்தட்ட நான் மெட்ராஸுக்கு வந்து 43 வருஷம் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு 35 வருஷமா யாரும் தாவணி போட்டு இங்கு பார்த்ததே இல்லை, ஹீரொயின் தாவணி போட்டு வந்துள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள். பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளது. இயக்குநர் படத்தை நன்றாக தந்துள்ளார். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் நன்றி. என்றார்.

Leave A Reply

Your email address will not be published.