‘கேடி’யில் நடித்தது அற்புத அனுபவம்: சஞ்சய்தத் உற்சாகம்

கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே.நாராயணா தயாரிக்க கன்னடத்தில் உருவாகி வரும் அதிரடி ஆக்ஷன் படம் ‘கே.டி. தி டெவில்’. பிரேம் இயக்கும் இந்த படத்தில் துருவா சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ரீஷ்மா நானையா, ரமேஷ் அரவிந்த், ரவிச்சந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மற்றும் தமிழ் பதிப்பு அறிமுக விழா சென்னையில் நடந்தது.

விழாவில் சஞ்சய் தத் பேசியதாவது: சென்னை எனக்கு பிடித்த நகரம், இங்கு எனக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் உள்ளிட்ட பல நண்பர்ககி இருக்கிறார்கள். ரஜினி மற்றும் கமலை நான் மிகவும் மதிக்கிறேன். அவர்கள் என்னுடைய சீனியர்கள். அவர்களை எப்போதும் வியந்து பார்க்கிறேன்.
இந்தியில் பல படங்களில் நான் ரஜினியுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். அவர் மிகவும் பணிவான நபர். அவரது ‘கூலி’ படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். விஜய்யுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது.

‘கேடி’ படத்தில் நடித்தது அற்புதமான அனுபவமாக இருந்தது. படக்குழுவினர் என்னை அதிக அன்புடன் கவனித்துக்கொண்டனர். இது அட்டகாசமான மாஸ் ஆக்‌ஷன் படம். துருவ் சர்ஜா, ஷில்பா ஷெட்டி நன்றாக நடித்துள்ளனர். அனைத்து ரசிகர்களுக்கும் இப்படம் பிடிக்கும்’ என்றார்.

ஷில்பா ஷெட்டி பேசும்போது, ‘நான் பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்றேன். சென்னைக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி அளித்துள்ளது. தமிழ்நாட்டையும், இங்குள்ள மக்களையும் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. விஜய்யுடன் ‘குஷி’ படத்தில் ‘மேக்கரீனா’ என்ற பாடலுக்கு ஆடினேன். பிறகு பிரபுதேவாவுடன் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தபோது தமிழில் பேச கற்றுக்கொண்டேன்.

தமிழில் நிறைய இடைவெளி ஏற்பட்டுவிட்டது. மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். ‘கேடி’ படத்தில் சூப்பரான எமோஷன் இருக்கிறது. சூப்பரான ஸ்டார்ஸ், சூப்பரான இயக்குனர் இருக்கின்றனர். அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறோம். தமிழ் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இப்படம் பிடிக்கும்’ என்றார்

Leave A Reply

Your email address will not be published.