புதிதாக போலீஸ் கான்ஸ்டபிளான அதர்வா தனது நண்பர்களான பரணி, சாரா உள்ளிட்ட நண்பர்களுடன் போலீஸ் வேலைக்கு சேரச் செல்கிறார்கள். பணியாற்ற வேண்டிய காவல் நிலையத்தில் இருந்து பணி உத்தரவு வாங்க செல்லும்போது அதை கொடுக்க வேண்டிய இன்ஸ்பெக்டர் நாளை வருவதாகவும் அதுவரை ரவுண்ட்ஸ் போய் வரும்படியும் போலீஸ் ஸ்டேஷனில் சொல்கிறார்கள்.
இவர்களும் ரவுண்ட்ஸ் கிளம்புகிறார்கள். அப்போது ஒரு திருடனை துரத்தும் அவர்கள் ஒரு கைவிடப்பட்ட குடிசை பகுதிக்குள் சென்று விடுகிறார்கள். அந்த குடிசை பகுதிக்குள் இருந்து வில்லன் அஸ்வின் ஒரு மிகப்பெரிய சதி திட்டத்தை தீட்டிக் கொண்டிருக்கிறார். அவரிடம் உள்ள அடியாட்களுக்கும், அதர்வா டீமில் உள்ள கான்ஸ்டபிள்களுக்கும் மோதல் நடக்கிறது. இதில் வெற்றி பெறுவது யார் என்பதும், அஸ்வின் யார்? அவர் நோக்கம் என்ன? அதர்வா அந்த குடிசை ஏரியாவுக்குள் சென்றது என்ன? அவருக்கும், அஸ்வினுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் படத்தின் கதை.
பொதுவாக படங்களில் தர்மமும், அதர்மமும் மோதும் இறுதியில் தர்மம் வெல்லும் ஆனால் இந்த படத்தில் வில்லன் அஸ்வின் பக்கமும் ஒரு தரமான நியாயம் இருக்கிறது. இதனால் தர்மமும், தர்மமும் மோதி எது வெற்றி பெறுகிறது என்பதை புதுமையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ரவீந்திர மாதவா. ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருந்தாலும் அதற்குள்ளும் ஒரு சமூக பிரச்சினையை உள்ளடக்கி பொறுப்பான ஒரு படம் தந்திருக்கிறார்.
அதர்வா கான்ஸ்டபிள் கேரக்டருக்கு கச்சிதம், பொறுப்பில்லாத மகன், பொறுப்புள்ள காவலன், காதலை மதிக்கும் காதலன் என மூன்று தளத்திலும் முத்திரை பதிக்கிறார். காதலியாக வரும் லாவண்யா திரிவேதிக்கு அதிக வாய்ப்பில்லை என்றாலும் கிடைத்த வாய்ப்பில் ஸ்கோர் செய்கிறார்.
வில்லன் அஸ்வின் மிரட்டல் ரகம். தன் தரப்பு நியாயத்தை சொல்லிக் கொண்டே அவர் செய்யும் வில்லத்தனங்கள் ரசிக்க வைக்கிறது. பிரமாண்ட குடிசை பகுதி, பூமிக்கடியில் உள்ள பாதாள சாக்கடை குகை பகுதி என தயாரிப்பாளரும் காசை தண்ணீராக செலவு செய்திருக்கிறார். கொடுக்கிற காசுக்கு வஞ்சகம் இல்லாத பக்கா ஆக்ஷன் விருந்து வித் குட் மெசேஜ்.