பயணங்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை, அதில் கூடுதலாக இருந்தால் அதுதான் ‘யெல்லோ’ இந்த லைனை வைத்து ஒரு இனிமையான திரைக்கதையைப் பின்னி இருக்கிறார் இயக்குநர் ஹரி மகாதேவன்.
படத்தின் நாயகி பூர்ணிமா ரவி காதலுடன் பிட்ஸ் பிலானி சென்று படிக்க திட்டமிடுகிறார். இந்த நேரத்தில் தந்தை டெல்லி கணேஷ் படுத்த படுக்கையாக தன் பயணத்தை ரத்து செய்கிறார். காதலுனும் பிரிகிறான். இதனால் மன அமைதிக்காக தனது பால்ய கால நண்பர்களை தேடிச் செல்கிறார். இந்த பயணத்தில் அவர் கற்றது என்ன? பெற்றது என்ன என்பதுதான் படத்தின் கதை.
சின்னத்திரை மற்றும் யூடியூப் மூலம் பூர்ணிமா ரவி நமக்கு நன்கு அறிமுகமாகி இருந்தாலும், அவரின் முழு திறமையும் இதில் வெளிப்பட்டிருக்கிறது. நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால் ஒரு ரவுண்டு வருவார். கங்கணா ரணவத் நடித்த ‘குயின்’ படத்தை நினைவூட்டினாலும் கவித்துவமான கதை.
வைபவ் முருகேசன், சாய் பிரசன்னா, லீலா சாம்சன், வினோதினி வைத்தியநாதன், பிரபு சாலமன், நமீதா கிருஷ்ணமூர்த்தி தங்களது தடத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள்.
பயணத்தை காட்சிப்படுத்திய விதமும், பயணப்படும் இடங்களும் படத்தில் முக்கிய பங்கு வகிப்பதோடு, அதன் அழகை அப்படியே அள்ளி வந்து தந்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக். ஒரு நல்ல பயண அனுபவத்தையும் படம் தருகிறது.
இசையமைப்பாளர் கிளிஃபி கிறிஸ் இசையில் பாடல்கள் இனிமையாக ஒலிக்கிறது. இசையமைப்பாளர் ஆனந்த் காசிநாத்தின் பின்னணி இசை பயணத்தில் நம்மை ஒன்றை வைக்கிறது.
எளிமையான கதை என்றாலும், இயக்குனர் ஹரி மகாதேவன் பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அமைத்திருக்கும் திரைக்கதையும், அதை காட்சிப்படுத்திய விதமும் படத்தை ரசிக்க வைக்கிறது.
‘யெல்லோ’ : அழகான காதல் பயணம்