சமூக வலைத்தளங்களில் ஒரு பகுதியான யு டியூப், பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் போன்றவற்றை பயன்படுத்தி பணமும் சம்பாதிக்கலாம் என்கிற நிலை இருப்பதால் அதனை பலர் தவறான வழிகளில் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள். தங்களின் தளங்களின் பிரபலத்திற்காகவும், சில எல்லை மீறிய செயல்களை செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை பட்டியலிட்டு ஒருவர் கொலை செய்கிறார். அவர் யார் ? எதற்காக இப்படி செய்கிறார் ? என்பதுதான் படத்தின் கதை.
கதையின் நாயகன் மஹேந்திரன் சோகம், ஏமாற்றம், வெறி என எல்லா உணர்வுகளையும் கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் நீமா ரேய் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். கொஞ்சம் தாராளமாக கவர்ச்சியும் காட்டுகிறார். அவர் காட்டுக்குள் பதறி ஓடும்போதெல்லாம் நம்மையும் பதற வைக்கிறார்.
கருப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இயக்குனர் சிக்கல் ராஜேஷ், நடிப்பு, இயக்கம் இரண்டிலும் பாஸாகிறார். நிழல்கள் ரவி, சிசர் மனோகர், சேரன் ராஜ் ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பை தந்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஏ.எம்.அசார், இசையில் பாடல்கள் கதையோடு கேட்கும்போது ரசிக்கலாம். ஒளிப்பதிவாளர் பாஸ்கர், இரவு நேர காட்சிகளில் சில கவனிக்க வைக்கிற அளவிற்கு பணியாற்றி இருக்கிறார். இன்றைய கால சூழ்நிலையில் பேசப்பட வேண்டிய ஒரு விஷயத்தை துணிச்சலுடன் பேசி இருக்கிறார், இயக்குனர் சிக்கல் ராஜேஷ்.