துரோகிகளை விலக்கி வைத்தால் விஜய் இன்னும் வளர்வார்: கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேச்சு

திரைப்பட பத்திரிகை தொடர்பாளர், விஜயின் முன்னாள் உதவியாளர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர் பி.டி.செல்வகுமார். தற்போது கலப்பை மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இதன் மூலம் பல சமூக பணிகளை ஆற்றி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக சென்னையில் நேற்று நடிகர் விவேக் பிறந்தநாளை முன்னிட்டு போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் இளம் விதவைகள் தடுப்பு விழிப்புணர்வு, நலிந்த கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல் நிகழ்ச்சிளை நடத்தினார்.

சென்னை விருகம்பாக்கம் ஏவி எம் பார்க் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்வில் ஏராளமான பெண்கள் பங்கேற்ற போதைக்கு எதிரான வாசகங்களை உரக்கச் சொன்னபடி விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. நலிந்த காமெடி நடிகர்களுக்கும் நூற்றுக்கணக்கான பெண்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய பி டி செல்வகுமார் பேசியதாவது: ஒரு நலத்திட்ட நிகழ்ச்சி நடத்துறோம்னா நாலு பேருக்கு நோட் புக், பென்சில் கொடுக்கிறதோட நிறுத்திக்கலாம்னு யோசிக்கிற ஆள் இல்லை. செய்றதை கொஞ்சம் விரிவா, சமூக அக்கறையோட செய்யணும்னுதான் முடிவெடுப்பேன்.

அப்படித்தான் கன்னியாகுமரியில பல அரசுப் பள்ளிகளுக்கு கலையரங்கம் கட்டிக் கொடுத்தோம்; வகுப்பறை கட்டிக் கொடுத்தோம். எங்களோட சமூகப் பணிகள் பற்றி நாங்க சொல்லணும்னு இல்லை. கல்வெட்டுக்கள் சொல்லும். அந்த வகையில சினிமா மூலமா மூட நம்பிக்கை கருத்துக்களை எடுத்துச் சொன்ன அண்ணன் விவேக் அவர்களோட பிறந்தநாள்ல இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சோம்
எனக்கு பத்து வீடு இருக்குன்னு ஒருவர் சொல்லியிருக்கார். அப்படியே இருந்தாத்தான் என்ன? சின்ன வீடு வெச்சிருந்தாதான் தப்பு. எனக்கு 10 வீடு இருக்குனு நிரூபிச்சிட்டா 8 வீட்டை அவர் பேர்ல எழுதி வைக்கிறேன். பேசணும்னா யாரு வேணாலும் என்ன வேணாலும் பேசலாம். ஆனா, உழைச்சாத்தான் எதையும் அடைய முடியும்.

நான் எஸ் ஏ சந்திரசேகர் சார்கிட்டேயும் விஜய் சார்கிட்டேயும் பல வருடம் வேலை பார்த்திருக்கேன்னு பலருக்கும் தெரியும். 200 படங்களுக்கு பி ஆர் ஓ’வா வேலை பார்த்திருக்கேன். 122 படங்களை ரிலீஸ் டிஸ்ட்ரிபியூட்டரா இருந்து ரீலீஸ் பண்ணிருக்கேன். நான் தயாரிச்சு விஜய் நடிச்ச ‘புலி’ படத்தை ரிலீஸ் செய்ய விடாம தடுக்கிறதுக்காக ரெய்டு வர வெச்சாங்க. என்னை ஹவுஸ் அரஸ்ட் பண்ணாங்க. என்கிட்டே அன்னிக்கு வெறும் 2000 ரூபாய்தான் இருந்துச்சு. அப்படியான நெருக்கடிகளையும் சந்திச்சிருக்கேன்.

பல நாள் துக்கமில்லாம உழைச்சிருக்கேன். இப்போகூட எனக்கு ஆபரேசன் நடந்துச்சு. மூணு மாசம் ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்னதையும் தாண்டித்தான் இந்த நிகழ்ச்சியை நடத்தறேன். நான் திடுதிப்னு வளரல. எல்லாத்துக்கும் பின்னாடி கடுமையான உழைப்பு இருக்கு. 
என்னை விஜய் சார்க்கிட்டேயிருந்து பிரிக்கிறதுக்காக ஒரு நபர் எல்லா விஷயத்தையும் பண்ணார். அந்த சகுனி, துரோகி இப்போவும் விஜய்கிட்டே இருக்கார். விஜய் நான் வளர்த்த மரம்; நான் தண்ணி ஊத்தி வளர்த்திருக்கேன். அவரு இன்னும் நல்லா வளரணும். அதுக்கு சகுனிகளை, துரோகிகளை விலக்கிவெச்சுட்டு கூட நல்லவர்களை கூட வெச்சிக்கணும். அப்போதான் விஜய் இன்னும் நல்லா வளர முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலப்பை மக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வி கே வெங்கடேஷ் , நிர்வாகிகளில் ஒருவரான ராஜ்குமார், விருகம்பாக்கம் பகுதி நிர்வாகி திவாகர் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
========

Leave A Reply

Your email address will not be published.