இயக்குனர்கள் எழுத்தாளராகும் காலம், அந்த வரிசையில் அடுத்து வந்திருக்கிறார்,எழுத்தாளரும் இயக்குனருமான கிஷோர் முத்துராமலிங்கம். கமெடி நடிகர் மூனீஷ்காந்தை கதை நாயகனாக்கி, மார்க்கெட் இல்லாமல் சினிமாவை விட்டு விலகி இருந்த விஜயலட்சுமியை கதை நாயகியாக்கி இருக்கும் துணிச்சலே கதை மீது இயக்குனருக்கு இருந்த நம்பிக்கையை சொல்கிறது. அந்த நம்பிக்கை சரியானதுதான் என்பதை படம் பார்த்த அனைவரும் ஒப்புக்கொள்வர்.
சென்னையில் மாத சம்பளத்தில் குடும்பம் நடத்தி வரும் முனிஷ்காந்தின் கனவு, சொந்த ஊரில் ஒரு நிலம் வாங்கி செட்டிலாக வேண்டும் என்பது. மனைவி விஜயலட்சுமிக்கோ, சென்னையிலேயே சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பெரிய ஆசை.
குழந்தைகளின் தேவைகள், வீட்டுச் செலவுகள் என்று தினமும் திண்டாடும் இந்த குடும்பத்தின் வாழ்க்கையில் ஒரு நாள் 1 கோடி மதிப்புள்ள காசோலை கைக்கு கிடைக்கிறது. அந்த பணம் வந்துவிட்டது என்ற நம்பிக்கையில் அவர்கள் கடன் வாங்கி பல செலவுகளை தொடங்கிவிடுகின்றனர்.
ஆனால் அந்த காசோலை திடீரென தொலைந்துவிட, அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
ஒரு நடுத்தர குடும்பத்தின் போராட்டங்களையும் கனவுகளையும் இயல்பாகவும், நகைச்சுவையுடனும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம்.
மிடில் கிளாஸ் குடும்பத் தலைவனாக முனிஸ்காந்த், மிக இயல்பாக நடித்திருக்கிறார். நாம் அடிக்கடி சந்திக்கும் மனிதர்களை நினைவூட்டுகிறார். மாத செலவுகளை கணக்கிட்டு கவலைப்படுவது முதல், குழந்தைகள் கேட்கும் விஷயங்களை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் வேதனை வரை அனைத்தையும் உணர்வோடு வெளிப்படுத்தியுள்ளார்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற கனவில் உறைந்து கிடக்கும் மனைவியாக விஜயலட்சுமி அசத்தியுள்ளார். குறிப்பாக இரண்டாம் பாதியில் அவரது ஆட்டம்தான் கூடுதலாக இருக்கிறது.வெங்கட், ராதாரவி, குரைஷி, மாளவிகா அவினாஷ், கோடாங்கி வடிவேலு, வேல ராமமூர்த்தி தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவும், பிரணவ் முனிராஜ் இசையும் படத்திற்கு உதவி இருக்கிறது.
மிடில் கிளாஸ்: ஆல் கிளாஸ் மூவி