தன்னிடம் இருக்கும் கோடிக்கணக்கான ரூபாயை வாக்காளர்களிடம் சேர்த்து விட்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார் அரசியல்வாதி கவின்.
அந்த பணத்தை டிஸ்ட்ரிபியூட் பண்ணிவிட்டு வெளிநாட்டில் செட்டிலாக நினைக்கிறார் பாலியல் தொழில் செய்யும் ஆன்ட்ரியா.
ஆனால் அந்த பணத்தை நடிகவேள் எம்.ஆர்.ராதா முகமூடியணிந்த ஒரு கொள்ளைக் கூட்டம் தட்டி தூக்குகிறது.
கொள்ளையடிக்கபட்ட பணத்தை கண்டுபிடிக்க தனியார் துப்பறிவாளர் நவீனை நியமிக்கிறார் ஆண்ட்ரியா.
குறுக்கு வழியில் நிறைய பணம் சம்பாதிக்க நினைக்கும் கவின் இந்த ஆட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு களமாடுகிறார். இறுதியில் பணம் யாருக்கு கிடைத்தது என்பதுதான் படத்தின் கதை.
கெத்தான உடல்மொழி, நக்கலான பேச்சு, எனப் படம் முழுவதும் ஜாலி பாயாக கவரும் கவின், சென்டிமென்ட் காட்சியிலும் கலங்கடிக்கிறார்.
நல்லவள் வேடம் அணிந்த வில்லியாக, தன் தோரணையும் மர்மமும் கலந்த உடல்மொழியால் பூமி கேரக்டரை தாங்குகிறார் ஆண்ட்ரியா. வழக்கமான அரசியல்வாதியாகப் பவன்.
முதல் பாதியில் ருஹானி ஷர்மாவும் இரண்டாம் பாதியில் சாரியும் படத்தை தாங்கி பிடிக்கிறார்கள். இவர்கள் தவிர வெங்கட் செங்குட்டுவன், கல்லூரி வினோத், ரமேஷ் திலக், சுப்பிரமணியம் சிவா, அர்ச்சனா, ஜார்ஜ் மரியன், ரெடின் கிங்ஸ்லி தங்கள் பங்கு நிறைவாக செய்கிறார்கள்.
நேர்த்தியான ஒளியமைப்பைக் கையாண்டு ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில், ‘கண்ணுமுழி’ பாடல் காதலைக் கசியவிட, ‘வெற்றி வீரனே’ பாடல் கதைக்கருவைப் பேசுகிறது.
லவ், ஆக்ஷன், சேஷிங், ரகளை என கலகலப்பூட்டும் காட்சிளால், ரசிக்க வைக்கிறது படம்.