தீயவர் குலை நடுங்க: நல்லவர்களையும் நடுங்க வைக்கும் படம்

சில வருடங்களுக்கு முன்பு சென்னை நகர மக்களை குலை நடுங்க வைத்த ஒரு சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கிறது இந்த crime திரில்லர் படம். ஒரே அடுக்கு மாடியில் குடியிருக்கும் ஒரு எழுத்தாளர், ஒரு தொழிலதிபர், இரண்டு செக்யூரிட்டிகள் முகமூடி அணிந்த மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலை வழக்கை காவல்துறை அதிகாரி அர்ஜூன் விசாரிக்கிறார்.

மறுபக்கம் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியின் ஆசிரியையான ஐஸ்வர்யா ராஜேஷ், திருமண வலைத்தளம் மூலம் பெண் தேடும் பிரவீன் ராஜாவுக்கு விருப்பம் தெரிவிப்பதோடு, அவருடன் நெருக்கமாக பழக தொடங்குகிறார். கொலைகள் நடக்கும் அடுக்குமாடி குடியிருப்பில்தான் ஐஸ்வர்யா ராஜேஷின் காதலர் இருக்கிறார். இதனால் போலீசின் சந்தேக பார்வை ஐஸ்வர்யா ராஜேஷ் மீது விழுகிறது. இறுதியில் கொலையாளி யார் ஏன் கொலை செய்கிறார் என்பது படத்தின் கிளைமாக்ஸ். 

காவல்துறை அதிகாரி வேடம் அர்ஜுனுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி இதில் நிறையவே சாப்பிடுகிறார். தனது கம்பீரமான நடிப்பு மூலம் காவல்துறை அதிகாரியாக மிரட்டுகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பால் அசத்தியிருக்கிறார்.  ஆக்சன் ஹீரோயினாக சண்டையும் போடுகிறார். ஆட்டிசம் பாதித்த சிறுமியாக நடித்திருக்கும் அனிகா, மிக இயல்பாக நடித்து வியக்க வைக்கிறார். பிரவீன் ராஜா, லோகு.என்.பி.கே.எஸ், ராம்குமார், தங்கதுரை, பிராங் ஸ்டார் ராகுல், பிரியதர்ஷினி, சையத், ஜி.கே.ரெட்டி, பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.கே.சுந்தர், வேல ராமமூர்த்தி, பத்மன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு. 

இசையமைப்பாளர் பாரத் ஆசீவகன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு, படத்தில் பரபரப்பாக கொண்டு செல்ல உதவியிருக்கிறார்.

கதை அமைப்பு, காட்சிகள் மூலம் உண்மையிலேயே குலை நடந்த வைத்திருக்கிறார் இயக்கியிருக்கும் தினேஷ் லக்‌ஷ்மணன்.

உண்மை சம்பவம் ஒன்றை கதைக்கருவாக முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை, அடுத்தது என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்புடன் பயணிக்கும் திரைக்கதை, பார்வையாளர்களுக்கு சிறந்த கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் அனுபவத்தை தருகிறது படம்.

தீயவர்களை மட்டுமல்ல… நல்லவர்களையும் குலை நடுங்க வைக்கும் படம்.

Leave A Reply

Your email address will not be published.