ஆர்.கே. ட்ரீம் பேக்டரி சார்பில் டி. ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ள படம் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கி, நடித்திருக்கிறார். அவருடன் லிவிங்ஸ்டன் , இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ராணா, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஸ்ரீ நிதி, கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன், ராதாகிருஷ்ணன், எம் ஆர் அர்ஜுன், மிருதுளா சுரேஷ், ஜெய ஸ்ரீ சசிதரன், தீக்ஷன்யா, மஞ்சு, சர்க்கார் மீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். என். எஸ். ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்
படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ எம் வி பிரபாகர் ராஜா மற்றும் இயக்குநரும், நடிகருமான கௌரவ் நாராயணன் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர் கே ட்ரிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. ராதாகிருஷ்ணன் தயாரித்திருக்கிர். மேலும் கே எம் பி புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ் பி எம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம் புவனேஸ்வரன் மற்றும் சி சாஜு – ஜோதிலட்சுமி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பங்காற்றியுள்ளனர். இந்த திரைப்படத்தை சோரியன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.
டிசம்பர் மாதம் 5ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பாடல் வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ”சினிமாவிற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்தது. சினிமா குடும்பத்திற்கு என்னை அழைத்து வந்த ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படக்குழுவினருக்கு நன்றி.
இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி,” என்றார் .
இயக்குநர்-நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் பேசுகையில், ”எல்லோரும் ஏதேனும் ஒரு மோசடியில் தெரிந்தோ, தெரியாமலோ சிக்கி இருப்போம். இந்த படத்தை உருவாக்கி சிலரிடம் காண்பித்த போது அவர்கள் நாங்களும் ஐந்து லட்சத்தை இழந்திருக்கிறோம், பத்து லட்சத்தை இழந்திருக்கிறோம் என சொன்னார்கள். இவர்கள் எல்லாம் தெரிந்து எப்படி ஏமாறுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இதுபோல் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் நாம் ஏமாறிக் கொண்டிருக்கிறோம். மோசடியாளர்கள் வெவ்வேறு பாணியில் தங்களுடைய மோசடியை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
இதையெல்லாம் திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்றால் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்திற்கு பத்து பாகத்தை எடுக்கலாம். என்னால் முடிந்த அளவிற்கு நான்கு வகையான மோசடிகளை இந்த படத்தில் இடம்பெறச் செய்திருக்கிறேன். அதை நேரடியாக சொல்லாமல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இணைத்து சொல்லி இருக்கிறேன்.
இந்த படத்தில் என்னுடன் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்தில் நாயகனாகவும் நடித்து இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறேன். இதற்கு விதை போட்டவர் இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து வாழ்த்தும் கே. பாக்யராஜ் அவர்கள் தான். ஹீரோவாகவும் நடித்து, இயக்கவும் முடியும் என்ற அவர் கொடுத்த நம்பிக்கையில் தான் நானும் இப்படத்தை இயக்கி நடித்திருக்கிறேன்,” என்றார்.