கதையின் நாயகன் ஆதர்ஷ், தனது மனைவி ஜோவிதா, தங்கை கீர்த்தியுடன் சென்னையில் வாழ்ந்துவருகிறார். பெரும் கடன் சுமையில் தவித்து வரும் அவருக்கு கிராமத்தில் இருந்து ஒரு நல்ல செய்தி வருகிறது. கிராமத்தில் இருக்கும் தாத்தா தனது சொத்துகளை பேரன், பேத்திக்கு எழுதி வைக்க விரும்புவதாக தகவல் வருகிறது. இதனால் தனது கடன் பிரச்னை தீரும் என்று மனைவி மற்றும் தங்கையுடன் கிராமத்துக்கு வருகிறார் ஆதர்ஷ். ஆனால் அவர் நினைத்தபடி அங்கு எதுவும் எளிதில் நடக்கவில்லை. பல பயங்கர பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் கதை.
அமானுஷ்ய கதைக்கு ஏற்ப நடித்திருப்பவர்கள் அனைரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். நாயகன் ஆதர்ஷ் குடும்பத்தின் மீதான அ’கறை, அமானுஷ்யத்தின் மீதான பயம் இரண்டையும் சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.அவரது மனைவி ஜோவிதா லிவிங்ஸ்டன், தங்கை கீர்த்தி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ‘அருவி’ மதன், அவரது மனைவி சோனியா அகர்வால் யதார்த்தமாக நடித்துள்ளனர். மற்றும் கே.பாக்யராஜ், லிவிங்ஸ்டன், அமுதவாணன், ரபீக் பாட்ஷா, ஆர்ஜே விஜய் என ஒரு நட்சத்திர பட்டாளமும் இருக்கிறது.
சங்கீத் மணிகோபால் ஒளிப்பதிவு பயமுறுத்துகிறது. விக்னேஷ் ராஜாவின் பின்னணி இசை மிரட்டுகிறது.. மூடநம்பிக்கையில் மூழ்கியுள்ள மக்களுக்கான விழிப்புணர்வு கதையை எழுதி இயக்கியுள்ள கே.எஸ்.கிஷான், திகில் அனுபவத்தை தருவதோடு சில மெசேஜ்களையும் சொல்லியிருக்கிறார்.