நூறு சாமி: பெண்களின் உணர்வை பேசும் உன்னத படைப்பு

கிராமத்து பெண்ணான செல்வி (ஸ்வாசிகா) மனஉறுதியும், உடல் உறுதியும் வாய்ந்தவள். திருமணமான சில வருடங்களிலெயே கணவன் இறந்த பிறகு தனது இரு மகன்களையும் பல இன்னல்களுக்கு இடையே துணிச்சலுடன் வளர்த்து ஆளாக்குகிறார். மகன்கள் பாஸ்கர் (அஜய் திஷான்) மற்றும் விவேக் (சக்தி) இளைஞர்களாக வளர்ந்த பிறகு தனக்கு மறுமணம் செய்ய விரும்புகிறார் செல்வி. முதலில் மகன்கள் இதை கேலி கிண்டல் செய்தாலும் ஒரு கட்டத்தில் தாயை புரிந்து கொண்டு அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இதற்கு ஊரும், உறவும் எதிராக நிற்கிறது. அதையும் தாண்டி தனது தாய்க்கு அவர்கள் மறுமணம் செய்து வைத்தார்களா என்பது படத்தின் கதை.

முகத்தில் எப்போதும் ஒரு அப்பாவித்தனம், வியர்வை படிந்த தேகம், ஓய்வின்றி அலைந்து திரியும் குணம் என ஒற்றை ஆளாக படத்தை தாங்கி நிற்கிறார் ஸ்வாசிகா. மூத்த மகனாக அஜய் திஷான் பொறுப்பும் தெளிவும் கொண்டவராக வருகிறார். ஒரு சஸ்பென்சான கதாபாத்திரத்தில் சர்ப்ரைஸ் கொடு’கிறார் விஜய் ஆண்டனி. நடிப்பில் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறார். வில்லனாக மிரட்டுகிறார் பாலாஜி சக்திவேல். செல்வியின் மனப் போராட்டங்களைத் திரைச் சட்டகத்திற்குள் அடக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தர்ஷன் கிர்லோஷ். இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் இசையில் வந்திருக்கும் பாடல்களில் ‘அம்மா அம்மாதான்’, ‘மாயக் கனவோ’ பாடல்கள் இனிமையாக ஒலிக்கிறது. பின்னணி இசையும் கதைக்கு இசைந்திருக்கிறது.

தனித்து வாழும் பெண்களிடம் ஆண்களின் அத்துமீறல், ஜாதியின் பெயரால் நசுக்கப்படும் பெண்கள், கல்வியின் முக்கியத்தும், குறிப்பாக மறுமணங்களின் அவசியம் ஆணீயவற்றை பேசியிருக்கிறது படம். திரையரங்கிற்குள் நல்ல படமாகவும் அதற்கு வெளியே நல்லதொரு சமூக பாடமாகவும் அமைந்திருக்கிறது. நூறு சாமி, இதுவரை வெளிவந்த சிறந்த 100 படங்களில் ஒன்று.

Leave A Reply

Your email address will not be published.