கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம்.எஸ்.ஸ்விஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன் ‘. நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்களை எடுத்துக் கொண்டு மர்மமான க்ரைம் திரில்லராக உருவாகி உள்ளது. ஐந்து கொலைகள் ஒரே விதத்தில் நடைபெற்றுள்ளன. ஆனால் எந்தத் தடயமுமில்லை’ என்கிற புள்ளியில் தொடங்குகிற கதை.
டிவி நடிகர் சித்து நாயகனாக நடிக்கிறார் , தர்ஷிகா , ரித்விகா நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு மற்றும் பலர் நடித்துள்ளனர். பாலாஜி இயக்கியுள்ளார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது இதில் விழாவின் தொடக்கத்தில் ஷரண், கோபால், மனோஜ் என மூன்று தயாரிப்பாளர்கள் பேசினார்கள்.
தயாரிப்பாளர் மனோஜ் பேசும்போது,”இப்போது வரும் சில படங்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் ஓடுவதில்லை. சில படங்கள் ஓடிடியில் ஓடுகின்றன. எல்லா நல்ல படங்களும் ஓடுவதில்லை. இது ஒரு ஆபத்தான சூழ்நிலை இல்லையா? ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதி பாதிக்கப்படக்கூடாது என்று சொல்வது போல் ஒரு நல்ல படம் ஓடாமல் இருக்கக் கூடாது .நல்ல படங்களை வரவேற்பதற்கு ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் கொண்டு போய் சேர்க்க வேண்டும் .
நிறைய தரமற்ற படங்கள் வருகின்றன .ஆனால் ‘தி டார்க் ஹெவன்’ நிச்சயம் வெற்றி பெறக்கூடிய நம்பிக்கை கொண்ட படமாக இருக்கிறது. இன்று பல தயாரிப்பாளர்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
உப்புமா படங்களால்,
தரமற்ற படங்களால் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் பாதிப்பு அல்ல, பலருக்கும் பாதிப்பு.திறமையான இயக்குநர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடம் கிடைக்காமல் இருக்கிறது.திரை உலகிற்குத் தயாரிப்பாளர் மிக முக்கியம். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய கிரைம் திரில்லராக இருக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது ”என்றார்.
இன்னொரு தயாரிப்பாளர் ஷரண் பேசும்போது, “நான் இந்தப் படத்தில் நடிப்பதற்காகத் தான் வந்தேன் .ஆனால் பாலாஜி இந்தப் படத்திற்காக உழைப்பதையும் போராடுவதையும் நேரில் பார்த்தேன். அவர் சிரமத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று தோன்றியது .எனவே தயாரிப்பில் இணைந்து கொண்டேன்” என்றார்.
தயாரிப்பாளர் கோபால் பேசும் போது, “இந்தப் படம் தமிழ் சினிமாவில் சிறப்பான படம்.பாலாஜி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குநர்.அவர் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு எடுத்த படம் இது. சினிமாவில் அவருக்கான நல்ல இடம் கிடைக்கும்.இந்தப் படத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் யாரும் சோடை போகமாட்டார்கள் .இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.