கலாமயா ஃபிலிம்ஸ் சார்பில் கிதேஷ் வி தயாரித்துள்ள படம் ‘என்ன விலை’. சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஆல்பி ஆண்டனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் நிமிஷா சஜயனுடன் கருணாஸ், விஜயலட்சுமி அகத்தியன், சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீனா, மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்திய திரையுலகின் திறமையான நடிகைகளில் ஒருவராக தன்னை தொடர்ந்து நிரூபித்து வருபவர் நிமிஷா சஜயன். வித்தியாசமான, உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
வழக்கமான கதாபாத்திரங்களுக்குள் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல், யதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதைகளில் நடித்து, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்தார். மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிகையாக தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார்.
அந்த வரிசையில், சஜீவ் பழூரின் கதை மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ படத்தில் நடித்திருப்பது பற்றி கூறியதாவது:
இதற்கு முன்பும் ஒரு திரைப்படத்தில் நான் வழக்கறிஞராக நடித்திருக்கிறேன். ஆனால், ’என்ன விலை’ திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. நீதிமன்றத்திற்குச் சென்று அங்குள்ள வழக்கு விசாரணைகளை இயக்குநர் சஜீவ் பழூர் நேரில் கவனிக்கச் சொன்னார். அதற்கு முன்பு, வழக்கறிஞர்கள் வாதிடும் விதம் குறித்து எனக்குள் ஒரு கற்பனை இருந்தது. ஆனால், நீதிமன்றத்தில் நேரில் பார்த்தபோது அவர்கள் பேசும் விதம், வாதிடும் முறை, அங்குள்ள சூழல் அனைத்தும் நான் நினைத்ததைவிட மிகவும் இயல்பாகவும் யதார்த்தமாகவும் இருந்தது. அந்த அனுபவமே, நீதிமன்றக் காட்சிகளில் நான் வசனங்களைப் பேசும் விதத்தை மாற்றியது.
எனது முதல் படமான ‘தொண்டிமுதலும் திருஷ்சாட்சியும்’ திரைப்படத்திற்கு சஜீவ் பழூர் கதையாசிரியராக இருந்தார். தற்போது ‘என்ன விலை’ படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அவருடன் இணைந்து பணியாற்றுகிறேன். என்றார்.
‘