ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன் , அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படத்திற்கு அன்பில் அவன் என்று தலைப்பு வை’கப்பட்டுள்ளது. ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
வருகிற செப்டம்பர் மாதம் வெளிவரும் இந்த படத்தின் டைட்டில் அறிமுக விழா நடந்தது. இதில் அசோக் செல்வன் பேசியதாவது: என்னுடைய நடிப்பில் ஒரு படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் வெளியாகி இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது. சில நேரங்களில் சில திரைப்படங்களில் பணியாற்றும் போது அது வெளிவருவதற்காக சிறிது காலம் எடுத்துக் கொள்ளும். அதை நாம் அனுமதிக்கத்தான் வேண்டும்.
ஒவ்வொரு படமும் ஏதேனும் ஒரு வகையில் புதிதாக இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். அதற்காக ஒரு முயற்சி எடுக்க வேண்டும் என்று உழைப்பவன் நான். இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதிய கதை. தற்போது சினிமா மாறிவிட்டதாக நான் கருதுகிறேன். கதையை விட அந்த கதையை சொல்லும் ஸ்டைல்தான் அதாவது ஸ்கிரீன் பிளே தான் முக்கியம் என்று நினைக்கிறேன்.
இந்தப் படத்தை பொறுத்தவரை கதையாகப் பார்த்தால் இதற்கு முன் இதே போல் நிறைய கதை வெளியாகி இருக்கிறது. ஆனால் அதன் ஸ்க்ரீன் பிளே… அது வழங்கக்கூடிய திரையரங்க அனுபவம்… நிச்சயம் புதிதாக ரசிக்கக் கூடியதாக இருக்கும் என முழு நம்பிக்கையுடன் சொல்கிறேன். இந்தப் படத்தில் ரசிகர்கள் ரசிக்க கூடிய தியேட்டரிக்கல் மொமென்ட்ஸ் நிறைய உண்டு. அதிலும் குறிப்பாக பெண்கள் ரசிக்கக்கூடிய நிறைய மொமென்ட்ஸ் இந்த படத்தில் இருக்கிறது.
இது பெண்களை, அவர்கள் படும் கஷ்டங்களை மட்டும் பேசவில்லை. இதில் ஏராளமான மாஸ் மொமென்ட்ஸ் இருக்கிறது. அதிலும் இந்த படத்திற்கு ஒரு பெண் தயாரிப்பாளர் பக்கபலமாக இருந்து தயாரிக்கும் போது, அதன் வலிமை இன்னும் அதிகமாக இருக்கும்.
நான் உறுதியாக சொல்கிறேன் ‘அன்பில் அவன்’ திரைப்படம் நின்று பேசும். காதலுக்காக ஒருவன் எவ்வளவு தூரம் பயணிக்கிறான் என்பது தான் இப்படத்தின் ஒன் லைன். காதல் புத்திசாலியை முட்டாளாக்கும். சாதாரணமானவனை சாதனையாளராக்கும். இதை பிரதிபலிக்கும் வகையில் தான் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.