மலையாளத்தில் வெளியான ‘மை பாஸ்’படத்தை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி, கவர்ச்சியை சற்று கூடுதலாக சேர்த்து இயக்குநர் மாதேஷ் தந்திருக்கும் படம்.
லண்டனில் பிரபல நிறுவனத்தில் உயர் பதவியில் பணிபுரியும் ஸ்ரேயாவிடம் உதவியாளராக வேலைக்குச் சேருகிறார் விமல். மாயாவின் கீழ் பணியாற்றிய பலரும் அவரது கடுமையான குணத்தை சமாளிக்க முடியாமல் வேலையை விட்டு வெளியேறிய நிலையில், விமல் மட்டும் தொடர்ந்து அங்கே பணியாற்றுகிறார்.
முட்டலும், மோதலுமாக இருக்கும் இவர்களுக்கு ஒரு பிரச்சினை வருகிறது. இருவரும் கணவன்&மனைவியாக இருந்தால் மட்டுமே விசா தொடரும். இதனால் சும்மானாச்சும் போலியான ஒரு திருமணம் செய்து கொள்ள இந்தியா வருகிறார்கள். வந்த இடத்தில் விமலின் தந்தை பிரபுவிற்கு ஸ்ரேயாவை பிடித்து விட நிஜ திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அதன் பிறகு என்ன என்பது படத்தின் மீதி கதை.
ரொமாண்டிக் காமெடி படமாக புல்பார்மில் தந்திருக்கிறார் மாதேஷ். Ðல படங்களில் ரசித்த விமலின் இயல்பான நகைச்சுவை கலந்த நடிப்பை இதிலும் தந்திருக்கிறார். ஸ்ரேயா செம ஸ்டைலாக நடித்திருக்கிறார். குடும்ப குத்துவிளக்காகவும் மாறி நிற்கிறார். விமலின் தந்தையாக பிரபு, பாட்டியாக கே.ஆர். விஜயா, தாயாக உமா பத்மநாபன் உள்ளிட்டோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
அம்ரிஷ் இசையில் லண்டன் பப் காட்சியில் வரும் பாடலும், கிராமத்து பின்னணியில் விமலுடன் ஸ்ரேயா இடம்பெறும் பாடலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. ஜாலியாக இரண்டரை மணி நேரம் டைம் பாசாக வேண்டுமா? தியேட்டருக்கு ஒரு விசிட் அடிக்கலாம்.