கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘அனந்தா’. புட்டபர்த்தி சாய்பாபாவின் மகிமையை சொல்லும் படமாக உருவாகி உள்ளது. ஜெகபதிபாபு, சுகாசினி, மகேந்திரன், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். தேவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் தயாரிப்பாளர் கிரிஷ் பேசும்போது, “இந்த படத்தின் முழு பயணமும் ஒரு அதிசயம் தான். என் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் பாபா அவர்கள் தான் நிகழ்த்துகிறார். சாய்பாபா அவர்களின் பக்தர்கள் இந்த படம் நடப்பதற்கு உறுதுணையாக இருந்தார்கள்.
நான் சுரேஷ் கிருஷ்ணா அவர்களை இந்த படத்திற்கு தேடவில்லை, எல்லாம் அதுவாக நடந்தது. இந்த படம் கோடிக்கணக்கான சாய்பாபா பக்தர்களுக்கு ஒரு பதிலாக இருக்கும். இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. இந்த படம் பார்த்த பிறகு சாய்பாபா பற்றி தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள விரும்புவார்கள். 150 நாடுகளுக்கு மேல் உள்ள மக்கள் சாய்பாபா அவர்களை வணங்குகிறார்கள். அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பேசும்போது, ” இப்போது எனக்கு இருக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இந்த ப்ராஜெக்ட்டை சாத்தியப்படுத்திய கிரிஸ் அவர்களுக்கு நன்றி. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் கமர்சியல் படம் எடுப்பவன், ஆனால் என்னை சாய்பாபா பற்றி படம் எடுக்க சொன்னார்கள், அதுவும் கமர்சியலாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
2009 ஆம் ஆண்டு ஒரு அதிசயம் நடந்தது. என் நண்பர் ஒருவர் பாபாவை பற்றி பயோபிக் எடுக்க வேண்டும் என்று என்னிடம் கூறிக் கொண்டே இருப்பார். அப்போது முதல்முறையாக புட்டபர்த்தி சென்றேன். அங்கு சாய்பாபா அவர்கள் தெலுங்கில் என்னிடம், இத்தனை வருடமாக எங்கிருந்தாய்? ஏன் வரவில்லை? என்று கேட்டார்கள். அந்த இடத்திலேயே நான் அழுதுவிட்டேன். இரண்டு வருடங்களுக்கு பிறகு சாமி அவர்கள் இறந்து விட்டார்கள்.
அதன் பிறகு நான் என்னுடைய வழக்கமான சினிமா பணிகளை தொடர்ந்து. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதிகாலை கனவில் பாபா அவர்கள் தோன்றினார். உடனடியாக என் நண்பருக்கு இதைப்பற்றி சொன்னேன். ஆனால் அவர் உங்களை வைத்து பாபாவின் படத்தை எடுக்க நேற்று தான் பேசிக் கொண்டிருந்தோம் என்று சொன்னார். ஆனால் அப்போதும் நடக்கவில்லை. அதன் பிறகு கிரீஸ் வந்தார்கள், பாபாவின் பக்தர்கள் அனைவரும் இந்த படத்தை கொண்டாட வேண்டும், பாபாவை பற்றி அறியாதவர்களும் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அது போல் ஒரு கதை செய்ய சொன்னார்.
நான் மூன்று நாட்கள் அவகாசம் கேட்டேன். அடுத்த நாள் மூன்று மணிக்கு திடீரென முழிப்பு வந்தது உடனடியாக கதை எழுத ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் மொத்த கதையும் எழுதி விட்டேன்.
இந்த படத்தில் நிறைய பேரின் கதைகளை சொல்லி உள்ளோம். அதில் பாபாவின் பங்கும் இருக்கும். இந்த படத்திற்கு தேவா அவர்களின் பங்கு மிகப் பெரியது. வெறும் பத்து நிமிடத்தில் ஒரு பாடலை இசையமைத்து கொடுத்தார். இந்த படத்தில் ஒவ்வொரு காட்சி எடுக்கும் போதும் அதிசயத்திற்கு மேல் அதிசயம் நடந்தது. எனக்கு இந்த படத்தில் ஒரு அருமையான டீம் செட் ஆனது. அவர்கள் அனைவரும் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து உள்ளனர். அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. என்றார்.