டான் தொழிலை கார்பரேட் தொழில்போல நடத்துகிறார் ஆனந்தராஜ். ஏரியா வாரியாக ரவுடிகளை ஏஜெண்டாக வைத்து கொலை தொழிலை குலத் தொழில்போல் செய்து வருகிறார். தனது பண பலம், ஆள் பலத்தை வைத்து தன் மீது வழக்கு பதிவாகதபாறு பார்த்துக் கொள்கிறான். செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறை செல்ல தனிக்கூட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார்.
ஆனந்தராஜின் ரவுடி சாம்ராஜ்ஜியத்துக்கு முடிவுகட்ட, உதவி கமிஷனர் சம்யுக்தாவைக் களத்தில் இறக்குகிறது காவல்துறை. சம்யுக்தாவும், ஆனந்தராஜூக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்டி அவரை கைது செய்ய நெருங்குகிறார். அதேவேளை தொழில் போட்டி காரணமாக ஆனந்தராஜை கொலை செய்யவும் சிலர் திட்டமிடுகிறார்கள். இப்படி இரு தரப்பினரிடமும் சிக்கிக் கொள்ளும் ஆனந்தராஜ் என்ன ஆனார்? அவரது ரவுடி தொழில் என்ன ஆனது? என்பது மீதி கதை.
பல வருடங்களுக்கு பிறகு கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். காமெடியிலும், வில்லத்தனத்திலும் மிரட்டியுள்ளார், ஆனந்தராஜ். அவரது நக்கல் பேச்சு ரசிக்க வைக்கிறது.
காக்கிச் சீருடையில் ரசிக்க வைக்கிறார், சம்யுக்தா. தீபா, முனீஷ்காந்த் காமெடி ரசிக்க வைக்கிறது. ராம்ஸ், சசிலயா, ஆராத்யா, ஷகிலா ஆகியோரும் கொடுத்த வேலையைக் செய்துள்ளார்கள். ஸ்ரீகாந்த் தேவாவின் இசை ஆட்டம் போட வைத்துள்ளது. அசோக்ராஜின்
ஒளிப்பதிவும் படத்தை தாங்கி பிடித்துள்ளது.
கிளைமாக்ஸ் புதிதா இருந்தாலும், நம்பும்படியாக இல்லை. ரவுடியின் வாழ்க்கையை பாடமாக சொல்லியதுடன், நகைச்சுவையையுடன், சமூக கருத்தையும் சொல்லியிருக்கிறார், இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன்.