பிரபு சாலமன் இயக்கத்தில், 13 வருடங்களுக்கு முன்பு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற கும்கி படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்திருக்கிறது. முதல் பாம் போன்றே யானைக்கும், மனிதனுக்குமான அன்பை பேசுகிற படம் இது. காதல் டூயட் இரண்டும் இன்றி குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் ஏற்ற வகையில் உணர்ச்சிகரமான சாகசப் பயண அனுபவத்தை தருகிற படம்.
எம்ஜிஆர் நடித்த நல்ல நேரம், ரஜினி நடித்த தாய் மீது சத்தியம், கமல் நடித்த ராம் லட்சுமன் உள்ளிட்ட படங்கள், யானைக்கும் மனிதனுக்குமான அன்பை பேசியது. முந்தைய படங்களில் ஒரு நாடகத் தன்மை இருக்கும். ஆனால் யதார்த்த சினிமாவ வந்திருக்கிறது கும்கி 2.
குடிகார தாய், தந்தையிடமிருந்து விலகி நிற்கும் நாயகன் மதிக்கு காட்டில் தனித்துவிடப்பட்ட குட்டி யானையே வாழ்க்கையில் எல்லாமுமாகிறது. அதற்கு நிலா என்று பெயரிட்டு செல்லமாக வளர்க்கிறான். பெற்றோர் காசுக்கு ஆசைப்பட்டு அதனை கும்கி யானை பயிற்சிக்கா விற்று விடுகிறார்கள். பல வருடங்களுக்கு பிறகு தனது நிலாவை கண்டுபிடிக்கிறார் நாயகன், அப்போது அது முரட்டு சுபாவம் மிக்க கும்கி யானையாக வளர்ந்து நிற்கிறது. அதோடு அதனை அரசியல்வாதிகள் சிலர் தோஷம் நீக்க பலிகொடுக்கவும் ஏற்பாடுகள் செய்கிறார்கள். நிலாவை இந்த இருவருடமிருந்தும் மதி எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.
சசிகுமார் வாய்ஸ் ஓவரில் தொடங்கும் டிரைலர், கதையின் உணர்ச்சி ஆழத்தை உணர்த்துகிறது. இது குழந்தைகளின் கற்பனை உலகைத் தொடும் வகையில், சாகசமும் உணர்வும் கலந்த கதையாக புதிய தலைமுறைக்கு யானைகளின் உலகத்தை அறிமுகப்படுத்துகிறது.
நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் மதி, தோற்றத்தில் ஹீரோவுக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்தவராக இருக்கிறார். யானையை இழந்துவிட்டு தவிப்பது, யானையை ஆபத்தில் இருந்து காப்பாற்ற துடிப்பது, தன்னிடம் இருந்து யானையை பிரிக்க நினைப்பவர்கள் மீது கோபம் கொள்வது என்று பல்வேறு உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தி நடிப்பில் பாஸாகிறார்.
நாயகியாக அல்லாமல் சில காட்சிகளில் மட்டுமே வந்து போகும் ஷ்ரிதா ராவ், நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஆண்ட்ரூஸ், வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், அரசியல்வாதியின் உதவியாளராக நடித்திருக்கும் ஆகாஷ், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள். நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் அனைத்தும் மெலொடி ரகம். பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
இரண்டாவது கும்கியை பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் பிடிக்கும்.