ராதா பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் மதன் குமார் தயாரிக்கும் படம் ஐபிஎல்(இந்தியன் பீனல் லா) கருணாநிதி இயக்குகிறார். யூடியூபர் டி.டி.எப். வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெராடி, ‘ஆடுகளம்’ நரேன், ஜான் விஜய், போஸ் வெங்கட், திலீபன், ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ்.பிச்சுமணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். இம்மாதம் 28ம் தேதி உலகம் வெளிவருகிறது.
இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் மதன் குமார் பேசியதாவது: இந்த விழாவிற்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
இந்தப் படத்தின் ஹீரோ வாசன், அவரது இன்னொரு முகத்தை காண்பித்து நன்றாக நடித்திருக்கிறார். அவரைப் பற்றி பேசுவதற்கு பல அத்தியாயங்கள் உள்ளது. அவருக்கு இன்னும் பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதற்கும் என் வாழ்த்துகள்.
இயக்குநர் கருணாநிதி என் நெருங்கிய நண்பர். எங்கள் இருவருக்கும் இடையே 25 ஆண்டு கால நட்பு இருக்கிறது. ஒரு நாள் என்னை சந்தித்து யதார்த்தமாக இப்படத்தின் கதையை சொன்னார். இது உண்மை கதை. எல்லோருடைய வாழ்விலும் நடைபெற்று இருக்கக்கூடும். பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் இது போன்ற சம்பவங்களை எதிர்கொண்டு அதிலிருந்து பிறகு மெல்ல மெல்ல மீண்டு வந்திருப்பார்கள். நாட்டில் நடைபெறுகிற ஒரு விஷயம் தான் . அதனை இப்படத்தின் முன்னோட்டத்திலேயே நீங்கள் பார்த்திருக்கலாம்.
இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த படத்தை தமிழகம் முழுவதும் எங்கள் நிறுவனமே வெளியிடுகிறது.
இதற்கெல்லாம் தொடக்க புள்ளி என ஒன்று இருக்கிறது. அவர்தான் என்னுடைய இனிய நண்பர் மார்ட்டின் சுரேஷ். கொரோனா காலகட்டத்தின் போது அதிகார வர்க்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர். இவர் சொன்ன சம்பவங்களை தழுவி தான் இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் கருணாநிதி எழுதி, சிறப்பான படத்தை உருவாக்கி இருக்கிறார்,” என்றார்.
டி.டி.எப். வாசன் பேசியதாவது: இது என்னுடைய முதல் படம். நிச்சயமாக நிறைய தவறுகளை செய்திருப்பேன். படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்களுடைய நேர்மையான விமர்சனங்களை வெளியிடுங்கள். நீங்கள் குறிப்பிடும் என்னுடைய குறைகளை நான் திருத்திக் கொள்கிறேன்.
நான் கூச்ச சுபாவம் உள்ள பையன், இதை சொன்னால் யாரும் நம்ப மறுக்கிறார்கள். இந்தப் படத்தின் பாடலுக்காக நடனம் ஆடும் போது நடன இயக்குநருக்கு என்னுடைய கூச்ச சுபாவம் தெரியும். எனக்கு ஆட வேண்டும் என்ற விருப்பம் உண்டு . ஆனால் ஆடத்தெரியாது. இருந்தாலும் இப்படத்தில் நடனமாடி இருக்கிறேன். அதற்காக நடன இயக்குநருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
படப்பிடிப்பு தளத்தில் சக நடிகையான குஷிதா முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். அதிலும் குறிப்பாக முத்த காட்சியில் சௌகரியமான பங்களிப்பை அளித்தார்.
இப்படத்தின் டீசர் வெளியான தருணங்களில் இருந்து நான் என் சைடு ப்ரோமோஷனை தொடங்கி விட்டேன். என்னுடைய முதல் படம். என்னை நம்பி ரிஸ்க் எடுத்திருக்கும் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் ஏதாவது நல்லது நடந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் புரமோட் செய்து கொண்டு வருகிறேன்.
இந்த படத்தின் இரண்டாம் பகுதியில் என்னை நானே திரையில் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. உண்மை சம்பவத்தை தழுவி, அது சற்று கற்பனையை கலந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். சமூகத்தில் எவ்வளவு அநியாயங்கள் நடைபெறுகிறது என்பதை மக்களுக்கு சொல்லி இருக்கிறோம்.
செய்தித்தாள்களில் இது போன்ற சம்பவங்களை பார்வையிடுகிறோம், எளிதாக கடந்து சென்று விடுகிறோம். அந்த செய்திக்கு பின்னால் எந்த அளவு உண்மை இருக்கிறது. எந்த அளவிற்கு அரசியல் பலமும், பண பலமும் மிக்கவர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த படம் எடுத்துச் சொல்கிறது.என்றார்.