துல்கர் சல்மான் படங்கள் என்றாலே எப்போதுமே ஸ்பெஷல்தான். இந்த படமும் அதற்கு விதிவிலக்கல்ல. கருப்பு வெள்ளை சினிமா காலத்தில் நடந்தாக சொல்லப்படும் ஒரு கற்பனை கதை என்றாலும், இது நிஜ சம்பவங்களின் தொகுப்பாகும்.
கருப்பு வெள்ளை காலத்தில் உச்சத்தில் இருக்கும் இயக்குனர் சமுத்திரகனி ஒரு அழகான இளைஞன் துல்கர்சல்மானை கண்டுபிடித்து மகன் போல வளர்க்கிறார், சினிமாவில் ஹீரோ ஆக்குகிறார். மளமளவென வளரும் துல்கர் சல்மானை சகித்துக் கொள்ள முடியாமல் ஈகோவில் தவிக்கிறார் சமுத்திரகனி.
இப்படியான சூழ்நிலையில் ‘காந்தா’ என்ற படத்தில் இவரும் இணைந்து பணியாற்றுகிறார்கள் படப்பிடிப்பு தளத்தில் கிளம்பும் ஈகோ நெருப்பு, அந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகும் பாக்யஸ்ரீ போர்ஸ் கொலையில் முடிகிறது.
அவரை கொன்றது துல்கர் சல்மானா, அல்லது சமுத்திரகனியா அல்லது வேறு யார் என்பதை கண்டுபிடிக்க வருகிறார் போலீஸ் அதிகாரி ராணா டகுபதி. அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
லட்சுமி காந்தன் கொலை வழக்கு, சாவித்ரியின் வாழ்க்கை, ஷோபாவின் தற்கொலை என பலவற்றை நினைவுபடுத்தும் விஷயங்களுடன் சுவாரஸ்மான, த்ரில்லா க்ரைம் அனுபவத்தை தருகிறார் இயக்குனர் செல்வமணி செல்வராஜ். கருப்பு வெள்ளை காலத்தை வண்ணத்தில் கண்முன் நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் டேனி சான்செஸ் லோப்ஸ், ஜா சந்தரின் இசை அந்த காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. ஆர்ட் டைரக்டர் ராமலிங்கத்தின் உழைப்பு அபாரமானது. பழங்கால ஸ்டியோக்கள், கார்கள், நகர சாலைகள் என பிரமிக்க வைக்கிறார்.
துல்கர் சல்மான் நடிப்பு ‘மகாநடி’ படத்தை நினைவுபடுத்தினாலும் கொஞ்சம் நெகட்டிவ் ஷேட் காட்டி வித்தியாசப்படுத்தி இருக்கிறார். சமுத்திரகனி வித்யாகர்வம் பிடித்தவராக வாழ்ந்திருக்கிறார். பாக்யஸ்ரீ போர்ஸ் கண்களாலேயே பாதி நடிப்பை தந்து விடுகிறார். ராணா டகுபதி டெரர் போலீஸ் அதிகாரியாக மிரட்டுகிறார்.
மொத்தத்தில் டைம் மிஷின் மூலம் அந்த காலத்திற்கு சென்று வந்த உணர்வை தருகிறது படம்.