ஹீரோயின் என்ற பெயரில் டூயட் பாடுவதில் உடன்பாடில்லை: சித்தி இத்னானி

பிடிஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ள படம் ரெட்ட தல. மான் கராத்தே, கெத்து படத்தை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கி உள்ளார், சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.

அருண் விஜய், சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், யோகி சாமி, சாய்குமார், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற 25ம் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் படத்தின் டிரைய்லர் வெளியீட்டு விழா நடந்தது.

இதில் கலந்து கொண்டு நாயகி சித்தி இத்னானி பேசியதாவது: சிறிய இடைவெளிக்கு பிறகு தமிழில் நடித்துள்ள படம். சினிமா எனக்கு மிகவும் பிடிக்கும். இதனால் கூடுதல் பொறுப்பு இருப்பதாக உணருகிறேன். எனது முதல் தமிழ் படம் முடிந்ததும் கொஞ்சம் ரிலாக்ஸ் தேவைப்பட்டது. அதனால்தான் இந்த இடைவெளி.

சினிமாவில் மிக முக்கியமான விஷயம், பசி. இன்னும் சிறப்பாக செய்யவேண்டும் என்பது தான் அந்த பசிக்கான உணவு. செட்டில் ஆகிவிட்டோம் என்ற உணர்வே நம்மை வீழ்த்திவிடும். எனவே இந்த பசியையும், தேடலையும் முழுமையடைய செய்துவிடவே கூடாது. நான் பசி மிகுந்தவள்.

கதாநாயகி என்ற பெயரில் வந்துபோவது, டூயட் பாடுவது, காதல், ரொமான்ஸ் என்று சுற்றுவது இதெல்லாம் எனக்கு உடன்பாடில்லாதவை. வலிமையான, தகுதியான கதாபாத்திரங்களில் தான் நடிக்க நான் விரும்புகிறேன். அப்படித்தான் இந்த படத்தில் இணைந்தேன். என்றார்.
நடிகர் அருண் விஜய் பேசியதாவது:

இந்தப் படத்தின் கதை என்னை வெகுவாக கவர்ந்தது. மேலும் எனக்கு சவாலாக இருந்தது. அப்போதே நான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். இந்தப் படத்தின் முக்கிய தூணாக இருந்தது எடிட்டர் ஆண்டனி சார். படம் படு வேகமாக இருந்தது, அதை சரியாக கட் செய்து கொடுத்துள்ளார். படத்தில் பாடல்களும் காட்சிகளும் உயர்ந்த தரத்தில் இருக்கும்.

நடிகை சித்தி இத்னானி தனது முழு உழைப்பைக் கொடுத்துள்ளார். தமிழ் சினிமா இதற்கு பின் அவருக்கு பெரிய வரவேற்பு கொடுக்குமென நம்புகிறேன். இந்தப் படத்தில் அதிக ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. அது நன்றாகவே வந்துள்ளது. கண்டிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும். தனுஷ் சார் ஒரு பாடலைப் பாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இப்படத்திற்காக அனைவரும் பெரும் உழைப்பு கொடுத்துள்ளோம், கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் நன்றி.

Leave A Reply

Your email address will not be published.