தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகரான சித்ரா லட்சுமணன் ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற யு டியூப் சேனலை நடத்தி வருகிறார்.
இந்த சேனல் சார்பில், 2025ம் ஆண்டிற்கான இந்திய திரைப்படத் துறையின் சிறந்த சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் “ஃப்ரேம் & ஃபேம் ” விருது வழங்கும் விழா வருகிற ஜனவரி மாதம் 25ம் தேதி தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடக்கிறது.
இதன் அறிவிப்பு விழாவில் சித்ரா லட்சுமணன் பேசியதாவது: ஒரு பத்திரிக்கை தொடர்பாளராக இருந்து தான், நான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். டூரிங் டாக்கீஸ் சேனலில் சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமில்லாமல், தோல்வியடைந்தவர்கள் பற்றியும் நாம் பேசியுள்ளோம். சினிமாவை பற்றிய புரிதல் அனைவருக்கும் வர வேண்டும் என்று தான் அந்த ஒரு முடிவை எடுத்தோம்.
நாம் திரையுலகில் இருக்கிறோம், அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டது தான் ஃப்ரேம் & ஃபேம் திரைப்பட விருது விழா. எந்த ஒரு கலைஞர்களுக்கும் கோடி கோடியாய் சம்பாதித்தாலும், மேடையில் வாங்கும் கைதட்டல்கள் அதற்கு ஈடாகாது.
இந்த விருது வழங்கும் விழாவிற்கு கே. பாக்யராஜ் அவர்கள், தேர்வுக் குழுவின் தலைவராக செயல்பட, குஷ்பூ சுந்தர், இளவரசு, முரளி ராமசாமி, டி. சிவா, ஆர். கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார் ஆகியோர் தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
பத்திரிக்கை தொடர்பாளர் தொடங்கி, இயக்குனர் கதாநாயகன், கதாநாயகி என 50 கேட்டகிரியில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. வழக்கமாக கொடுக்கப்படும் விருதுகள் மட்டும் இல்லாமல் ஸ்பெஷல் ஆக சில விருதுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது, அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
விருது வழங்கும் விழா என்பது மிகப்பெரிய வேலை. நீண்ட நாட்களாக இது தொடர்பாக யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போது தான் அது நடைமுறைக்கு வந்துள்ளது. என்றார்.