பராசக்தியின் அருளால் உருவானது ‘பராசக்தி’

‘சூரரைப்போற்று’ படத்திற்கு பிறகு சுதா கொங்கரா இயக்கி உள்ள தமிழ் படம் ‘பராசக்தி’. 1960களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள பீரியட் பிலிம். இதில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்திருக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கும் 100-வது திரைப்படம். பொங்கல் பண்டிகையில் வெளிவருகிறது.

பராசக்தி அறிமுக நிகழ்வு வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. இதில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: 1960-களில் நடந்த சம்பவத்தை மையப்படுத்தி, இந்த கதையை இயக்குனர் சுதா கொங்கரா அமைத்துள்ளார். இந்த படத்தில் நான் நடிப்பதற்கு அவர்தான் காரணம். அவரோடு இணைந்து ஒரு படம் வேலை செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்து வைத்திருந்தேன். அதன்பிறகுதான் பராசக்தி கதையை கேட்டேன்.

கதை பற்றி நான் எந்த ஆய்வும் செய்யவில்லை. காரணம் இயக்குனரே எல்லா ஆய்வையும் முடித்து ஒரு பட்டம் வாங்கும் அளவிற்கு தயாராக இருந்தார். அதனால் அவர் சொல்வதை செய்தால் போதும் என்று முடிவு செய்து விட்டேன். இந்த படத்தில் நடிப்பது சவால்தான், எல்லோருக்குமே சவால்தான். ஆனால் அதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.

‘சோதனையை சந்திச்சாதான் சாதனை’னு நம்ம தலைவர் (ரஜினி) சொல்ற மாதிரி, இந்தப் படம் அப்படியான ஒரு சாதனையாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன். அவ்வளவு விஷயங்களை நாங்கள் கடந்து வந்திருக்கிறோம்.
நான் டி.வி.நிகழ்ச்சி நடத்தியபோது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அதர்வா வந்திருந்தார். இப்போது அவரோடு இணைந்து இந்த படத்தில் நடித்திருப்பது சிறப்பானது. நான் பார்த்து ரசித்து வியந்த ஹீரோ ரவிமோகன் இந்த படத்தில் வில்லன். இத்தனை ஆண்டுகள் ஹீரோவாக நடித்துவிட்டு வில்லனாக நடிப்பது ரொம்பவே துணிச்சலானது. அதனால்தான் அவரது பெயரை முதலில் போடுகிறோம்.

இந்த படத்தில் அமைந்த அற்புதமான குழு, படத்தின் டைட்டில் எல்லாமே பராசக்தி அருளில் கிடைத்தது என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.