ராஜா சாப்: ஹாரர், காமெடி கலாட்டா

தாய், தந்தையை இழந்து பாட்டியால் வளர்க்கப்படுகிறார் ராஜூ (பிரபாஸ்). பாட்டி கங்கம்மாவுக்கு (சரினா வாகப்) ராஜூதான் உலகம்.கங்கம்மா, நீண்ட வருடங்களுக்கு முன்பு காணாமல் போன கணவரை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறார்

பாட்டியின் நிலைமையைக் கண்டு கவலைப்படும் பேரன், திடீரென தனது தாத்தா போன்றொருவரை ஒரு போட்டோவில் காண்கிறார்.அதைத் தொடர்ந்து தாத்தாவைத் தேடிக் கண்டுபிடிக்கப் புறப்படுகிறார் ராஜூ. தாத்தா(சஞ்சய்தத்) இவர் நினைத்தது போல் சாதாரண ஆள் இல்லை. தன்னை தேடும் பேரனை ஒரு மாய மாளிகைக்கு வரவழைக்கிறார் தாத்தா.

அங்கு நிகழும் திகில் ஆட்டங்கள் என்ன, உண்மையிலேயே ராஜுவின் தாத்தா எத்தகையவர் என்பதை சொல்கிறது இந்த ஹாரர் காமெடி படம்.

கலகல இளைஞராக, பாட்டியிடம் பாசக்காரராக, காதலிகளிடம் சேட்டைக்காரராக, பழிதீர்க்கும் கோபக்காரராக, இந்த கமர்ஷியல் படைப்புக்குச் சகல விஷயங்களிலும் பொருந்தி, தனியொருவனா படத்தை தாங்கி பிடிக்கிறார் பிரபாஸ்.

சஞ்சய்தத் மந்திரவாதியாக மாயாஜாலக்காரனாக, வில்லனாக மிரட்டுகிறார். பாடல் காட்சிகளில், காதல் காட்சிகளில் படத்தை கலர்ஃபுல்லாக மாற்றுகிறார்கள், நாயகிகள் நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்திக் குமார். அம்மு அபிராமி சர்ப்ரைஸ் ஆச்சரியம். பாட்டியாக வரும் சரினா வாகப், சென்டிமென்ட், காமெடி காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.

முதல் பாதியில் கலர்ஃபுல் ரங்கோலியாக வர்ணஜாலம் நிகழ்த்தும் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி, இரண்டாம் பாதிக்கு டார்க் டோன் தந்து திகிலுக்குத் துணை நிற்கிறார். தமனின் பாடல்கள் திருவிழாப் பட்டாசாக வெடிக்கின்றன.

அனிமேஷன், கிராபிக்ஸ் காட்சிகளில் தொழில்நுட்ப தரம் உயர்ந்து நிற்கிறது. தாத்தாவைத் தேடும் பேரனின் கதையை அனைத்து வகையான கமர்ஷியல் மசாலாக்களையும் எடுத்து, ஹாரர் அவியலில் கலந்து மாஸ் என்டர்டைன்மெண்ட் படம் தந்திருக்கிறார் இயக்குநர் மாருதி.

Leave A Reply

Your email address will not be published.