தமிழ்நாடு சட்டமன்ற தேர்தர்தலுக்கு இன்னும் இருவாரமே உள்ள நிலையில், அரசியலை மையப்படுத்தி, அதுவும் புதிதாக கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்கும் விஜய்யை விமர்சித்து ‘ டிஎன் 202’ என்ற படம் அதிரடியாக களம் இறங்கி உள்ளது. விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சர்னங்கள் கிளம்பியுள்ளன. இப்படத்தில், நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கின்ஸ்லி, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் கதையை தம்பி ராமய்யா எழுதி உள்ளார், அவரது மகன் உமாபதி ராமய்யா இயக்கி உள்ளார்.
இந்த நிலையில் படத்தின் அறிமுக விழா நேற்று நடந்தது. இதில் இயக்குனர் உமாபதி ராமய்யா பேசும்போது இந்த படம் ஒரு ‘பொலிட்டிக்கல் சட்டையர்’ படம்தான். ஆனால் எந்த ஒரு தனிமனிதரையும் குறிவைத்து எடுக்கப்படவில்லை. குறிப்பாக இது விஜய்யை கிண்டல் செய்யும் படம் என்பதில் துளியும் உண்மை இல்லை. நான் விஜய்யின் பெரிய ரசிகன். விஜய் சிங்கம் மாதிரி அந்த சிங்கத்தை யாராலும் அவமதிக்க முடியாது. தயவு செய்து இந்த படத்தை யாரும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்காதீர்கள். 10ம் தேதி படம் வெளியான பிறகு எல்லோருடைய சந்தேகங்களுக்கும் பதில் கிடைக்கும்.
படத்தில் நடித்த நான்கு முக்கிய நடிகர்களும் போட்டி போட்டு நடித்தனர். அது ஒரு இயக்குனராக எனக்கு பெருமகிழ்ச்சியை அளித்தது. இந்த படத்திற்காக நட்டி கடுமையாக உழைத்துள்ளார். வேறு காலகட்டங்களில் இந்த படத்தின் கதை அமைந்துள்ளதால், அதற்கேற்ப அவரது தோற்றமும் மாறுபட்டிருக்கும். அதில் ஒரு தோற்றத்தை மையமாக கொண்டு பல மீம்ஸ்கள் வந்துகொண்டுள்ளன. அந்த தோற்றம் மூலம் யாரோ ஒருவரை களங்கப்படுத்துவதாக சொல்லப்படுகிறது. ஆனால், அப்படி எந்தவொரு நோக்கத்துடனும் இந்த படம் எடுக்கப்படவில்லை. என்றார்.
தம்பி ராமையா பேசுகையில், “ நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், திமுக, அதிமுக உள்ளிட்ட எல்லா கட்சியிலும் எனக்கு அன்பு தம்பிமார்கள் இருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவன். எனது வாழ்க்கையில் நான் ரிஸ்க் எடுக்கலாம். புதியதாக பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை. எனது மகனின் வாழ்க்கை என்பதால் எனக்கு பொறுப்பு அதிகமாக உள்ளது.
வெளியான தகவல்களை மட்டுமே கொண்டு ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் சங்கடப்படக் கூடிய வகையிலே, ஒரு நூல் அளவிற்கு கூட இந்த படத்தில் எதுவும் இருக்காது. இதையா நாம் கேள்வி கேட்டோம் என நீங்களே என்னை தொடர்பு கொண்டு பேசுவீர்கள். அப்படித்தான் படம் இருக்கும்” என்றார்.